அன்னுார்:பச்சாபாளையத்தில் பத்தாண்டுகள் நிலவி வந்த குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
பச்சாபாளையம் ஊராட்சியில், பச்சாபாளையம், மோளபாளையம், பூராண்டாம்பாளையம், உருமாண்ட கவுண்டன்புதுார் ஆகிய கிராமங்கள் உள்ளன.
திருப்பூர் இரண்டாம் குடிநீர் திட்டத்தில் கரியாம்பாளையம் நீரேற்று நிலையத்திலிருந்து பச்சாபாளையத்துக்கு நீர் 'பம்பிங்' செய்யப்படுகிறது. கரியாம்பாளையம் தாழ்வாகவும், பச்சாபாளையம் மேடாகவும் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு பத்தாண்டுகளாக நிலவி வருகிறது.
இந்நிலையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட, 1,500 மீ., துாரத்துக்கு புதிதாக குடிநீர் குழாய் பதித்து, இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி கட்ட நிர்வாக அனுமதி பெறப்பட்டது. நீலகிரி எம்.பி., ராஜா தொகுதி மேம்பாட்டு நிதியில், 27 லட்சம் ரூபாய் இதற்கு ஒதுக்கியுள்ளார்.
இதையடுத்து நேற்று பச்சாபாளையத்தில் பூமி பூஜை நடந்தது. ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை சேர்மன் சத்தியமூர்த்தி பணியை துவக்கி வைத்தார். துணைத் தலைவர் லட்சுமி, வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'தற்போது தரைமட்ட தொட்டி கட்டப்பட்டுள்ளதால் தண்ணீரை மேலே ஏற்றத் தேவையில்லாமல் தரைமட்ட தொட்டியில் சேமிக்கப்படும் நீர் 'பம்பிங்' மூலம் இங்கிருந்து வீடுகளுக்கும் பொது குழாய்களுக்கும் சப்ளை செய்யப்படும். இதனால் பத்தாண்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது,' என மகிழ்ச்சி தெரிவித்தனர்.