பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மலையோர கிராமங்களுக்குள் ஊடுருவும் யானைகளை தடுக்க வனத்துறையிடம் நிரந்தர திட்டம் எதுவும் இல்லை; தங்கள் பயிர்களை பாதுகாக்க தினமும் துாக்கத்தை தொலைத்து விடிய, விடிய காட்டு யானைகளை விரட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், கோவனுார், நஞ்சுண்டாபுரம், சின்ன தடாகம், சோமையம்பாளையம், வீரபாண்டி பகுதிகளில் உள்ள மலையோர கிராமங்களில், விவசாய தோட்டத்திற்குள் புகும் காட்டு யானைகள், ஏராளமான பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தென்னங்கன்றுகள், வாழை, சோளம் உள்ளிட்டவற்றை யானை கூட்டம் நாசம் செய்வது வாடிக்கையாகிவிட்டது.
இது தவிர, மலையோர கிராம ரேஷன் கடைகளுக்குள் புகுந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை யானைகள் 'ருசி' பார்ப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
குறிப்பிட்ட இந்த பகுதிகளில் யானைகள் ஊடுருவலை தடுக்க தினமும் வேட்டை தடுப்பு காவலர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், இவர்களால் முழுமையாக யானைகளின் வருகையை கட்டுப்படுத்த இயலவில்லை. சில நாட்களுக்கு முன், கணுவாய் வட்டாரத்தில் மட்டும், பத்துக்கும் மேற்பட்ட தோட்டங்களில் தென்னை, வாழை, சோள பயிர்களை யானைகள் சேதப்படுத்தின. சில தோட்டங்களில், 20 வயதுடைய தென்னை மரங்களை வேருடன் சாய்த்து சேதப்படுத்தின.
வனத்துறையிடம் யானைகள் ஊடுருவலை தடுக்க ஆக்கபூர்வமான திட்டம் எதுவும் இல்லாததே மனித-யானை மோதலுக்கு காரணமாக இருந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வாய் பிளந்த தொட்டிகள்
இதுகுறித்து, சின்ன தடாகம் வட்டார விவசாயிகள் கூறியதாவது:
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள மலையோர கிராமங்களுக்குள் புகும் காட்டு யானைகளை தடுக்க, வனத்துறை வசம் நிரந்தர திட்டம் எதுவும் இல்லை என்பது தான் உண்மை. யானைகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவைகளை வனப்பகுதிக்குள்ளேயே ஏற்படுத்தித் தர வேண்டும் என, பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால், அரசு அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
வனத்துறைக்குட்பட்ட பல இடங்களில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், போதுமான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த தொட்டிகள் பிளந்து கிடக்கின்றன. மழைக்காலங்களில் இந்த தொட்டிகளில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பு இல்லை.
இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மலையை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
யானை- மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டால் ஒழிய, இப்பிரச்னை தீராது. யானை போன்ற வனவிலங்குகளிடம் இருந்து எங்கள் விளைநிலங்கள், பயிர்களை காக்க தினமும் விடிய, விடிய துாக்கத்தை தொலைத்து கண்காணித்து வருகிறோம். இதற்கு அரசு என்ன மாற்று வழி செய்ய போகிறது என, தெரியவில்லை.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.