கருமத்தம்பட்டி:"டாக்டர் பரிந்துரைக்கும் மருந்து சீட்டு இல்லாமல் வலி நிவாரண மருந்துகளை விற்க கூடாது," என, மருந்து கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள சில மருந்து கடைகளில், போதை தரும் மருந்துகள், வலி நிவாரண மாத்திரைகள், டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல் விற்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன. இதன் எதிரொலியாக மருந்துக்கடைகளில் சோதனை நடத்தும் பணி நடந்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக சூலுார் வட்டார மருந்து ஆய்வாளர் பிரகாஷ், கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை ஆகியோர், கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள மருந்து கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது மருந்து கடைகளில் வைத்திருந்த பதிவேடுகளை ஆய்வு செய்தனர். விதிகளை மீறி மருந்துகளை விற்க கூடாது, என, கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினர்.
மருந்து ஆய்வாளர் பிரகாஷ் கூறுகையில்,"டாக்டர் பரிந்துரைக்கும் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் தரக்கூடாது. மருந்து சீட்டு உண்மையானதா, தற்போதைய தேதி உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். நரம்பு பிரச்னைக்கு உட்கொள்ளும் மருந்துகளை கொடுக்கும்போது, எந்த தேதியில், எவ்வளவு மருந்து வழங்கப்பட்டது என, 'சீல்' வைக்க வேண்டும். போதை தரக்கூடிய மருந்துகள், மூளையை பாதிக்கும் மருந்துகள், குறிப்பிட்ட வலி நிவாரண மாத்திரைகளை கேட்டால் தரக்கூடாது என, மருந்து கடைக்காரர்களுககு அறிவுறுத்தப்பட்டது," என்றார்.
கருமத்தம்பட்டி போலீசார் கூறுகையில்," போதை தரும் மருந்துகள் விற்கும் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.