சென்னை'ஏத்தர் எனர்ஜி' நிறுவனம், சென்னை மற்றும் வேலுாரில் புதிய விற்பனை மையங்களை நேற்று துவக்கியுள்ளது.
இதையடுத்து ஏத்தர் விற்பனை மையங்கள் எண்ணிக்கை, தமிழகத்தில் எட்டாக அதிகரித்துள்ளது. கூடுதலாக, 83க்கும் மேற்பட்ட 'சார்ஜிங்' நிலையங்களும் உள்ளன.
நவம்பர் மாத இறுதிக்குள், சேலத்தில் ஒரு விற்பனை மையமும், நடப்பு நிதியாண்டுக்குள், மொத்தம் 15 விற்பனை மையங்களையும், அத்துடன், 150க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களையும் அமைக்க உள்ளதாக, ஏத்தர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி ரவ்னீத் போகெலா கூறியதாவது:
தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு, கடந்த மாதம், ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்தது. காத்திருப்பு நேரத்தை 15 நாட்களாக குறைத்துள்ளோம்.
மேலும் இதை குறைக்க பல திட்டங்கள் உள்ளன. இதனால், தமிழகத்தில் எங்கள் சந்தை பங்களிப்பு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.