சென்னை: தமிழகத்திற்கு, இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ள நிலையில், சென்னையில் நேற்று(அக்.,31) இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை(அக்.,29) வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. படிப்படியாக மழை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.தொடர்ந்து, தமிழகத்தில் நேற்று(அக்.,31) பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.
சென்னையில் நேற்று காலை மழை துவங்கிய நிலையில், மாலை முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. இரவுக்கு மேல், கனமழையாக மாறியது. எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கிண்டி, திருவான்மியூர் ,அண்ணாசாலை, மெரினா கடற்கரை, சேப்பாக்கம்,சாந்தோம், தேனாம்பேட்டை, வேளச்சேரி , அடையாறு உள்ளிட்ட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது.
புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
மாநகராட்சி தீவிரம்
கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது, கலெக்டர் அலுவலக வளாகத்திலும் மழைநீர் தேங்கி உள்ளது. புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை, இணைப்பு சாலைகள், மண்ணடி உள்ளிட்ட பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை அமைந்திருக்கும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை நீரை வெளியேற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.
சென்னை புதுப்பேட்டையில் குடியிருப்பு பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளது. வடிகால் வழியாக தண்ணீர் வெளியேறினாலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சில இடங்களில் வீடுகள் மற்றும் கடைக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கிய மழைநீரை, ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இருவர் பலி
வியாசர்பாடியை சேர்ந்த தேவேந்திரன் என்ற ஆட்டோ டிரைவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
சென்னை புளியந்தோப்பு பிரகாஷ்ரெட்டி காலனி பகுதியில், கனமழை காரணமாக பால்கனி இடிந்து விழுந்தது. அதில், இடிபாடுகளுக்குள் சிக்கி சாந்தி(46) என்ற பெண் உயிரிழந்தார்.
மழை அளவு
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 8.5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. திருவிக நகர், கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்ப்பேட்டையில் தலா 16 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மணலியில் 15 செ.மீ., கொளத்தூர், அண்ணா நகரில் 13 செ.மீ., பெரியமேட்டில் 11 செ.மீ., மதுரவாயலில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய பஸ்
வியாசர்பாடியில்
ஜீவா பாலத்தில் மழை நீர் தேங்கியது. அப்போது, போக்குவரத்து
கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ் கடக்க முயன்றது. ஆனால், நடுவழியில்
பேருந்து நின்று போனது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள்,
பஸ்சில் இருந்த 25க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து
பஸ்சை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
சென்னையில்
மழைநீர் தேங்கும் பகுதிகளில் நீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயாராக
உள்ளன. சென்னையில் நேற்று முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில்,
20,000 மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
கனமழையால் மரம் விழுந்த 25 இடங்களில், 17 இடங்களில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் இரண்டு இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இலங்கையின் வடக்கு கடற்கரையை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில், சில இடங்களில் இன்று மிக கன மழை பெய்யும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், பெரம்பலுார், அரியலுார், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில், நாளை கன மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில், 5 செ.மீ., குறைந்தபட்சமாக சென்னையில், 1 செ.மீ., மழை பெய்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுத்து இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
தொடர் மழை காரணமாக புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 967 கனஅடியாகவும், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 66 கனஅடியாக அதிகரித்துள்ளது.