சென்னை :அ.தி.மு.க.,வின் இடத்தை பிடிக்க பா.ஜ., முயற்சிப்பதாக, தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருவதன் வாயிலாக, பா.ஜ.,வை வீழ்த்த, அ.தி.மு.க.,வையும் துணைக்கு அழைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வென்று, தி.மு.க., ஆட்சியை பிடித்தது. ஆட்சியை இழந்துள்ள அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னைகளால் பிளவுபட்டுள்ளதால், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல, தி.மு.க.,வை வலுவாக எதிர்க்க முடியவில்லை.
![]()
|
இந்த சூழலில் பா.ஜ.,வின் செயல்பாடுகள் தி.மு.க.,வினரையும், அக்கட்சியின் ஆதரவாளர்களையும் கலக்கமடைய செய்து உள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., ஒரு அறிக்கையோடு மவுனமாகி விட, தமிழகபா.ஜ., தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து வெளியிட்ட தகவல்களும், எழுப்பிய கேள்விகளும், தி.மு.க., அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தின.சமீபத்தில் திருச்சியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், தி.மு.க., முதன்மை செயலரும், அமைச்சருமான நேரு பேசியதாவது:எதிர்கட்சியான அ.தி.மு.க., பிளவுபட்டுள்ளது. அ.தி.மு.க., இடத்தை பிடிக்கும் நோக்கத்தோடு, அவர்களை ஒன்றுசேர விடாமல் பா.ஜ., தடுத்து வருகிறது. இதனால், பா.ஜ., வளரும் நிலை ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில்,தமிழகத்தில் 10 இடங்களில் வெற்றி பெறுவோம். அதன் பின் சட்டசபை தேர்தலில்பார்க்கலாம் என, பா.ஜ.,வினர் சவால் விடும் நிலை வந்திருக்கிறது.பா.ஜ.,வினர் ஒவ்வொரு கிராமங்களில், 20 பேர் கொண்ட ஓட்டுச்சாவடி கமிட்டிகளை அமைத்து வருகின்றனர். எந்த இடத்தில் பா.ஜ., காலுான்றுகிறது; எந்த இடத்தில், எப்படி செயல்படுகின்றனர் என்பதை கவனித்து, தி.மு.க., ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இனி வரும் காலம், மிகமிக கவனமாக பணியாற்ற வேண்டிய காலம்.
இவ்வாறு, அவர் பேசினார்.தேர்தல் களப் பணியில் வல்லவரான நேரு, 'ஒவ்வொரு கிராமத்திலும் பா.ஜ., ஓட்டுச்சாவடி கமிட்டிகளை அமைத்து வருகிறது' என்று கூறியதை எளிதாக ஒதுக்கிவிட முடியாது.
அவரின் பயம் நியாயமானது தான் என, தி.முக.,வினர் மட்டுமின்றி, காங்., - வி.சி., - கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் தங்களுக்குள் விவாதித்து வருகின்றனர்.'பா.ஜ.,வினர் தயிர் சாதத்தை கட்டி வந்து, கொள்கைக்காக வேலை செய்கின்றனர். நாம் பிரியாணி, பணம், பாட்டில் கொடுக்க வேண்டியிருக்கிறது' என, தமிழக காங்., தலைவர் அழகிரி, சமீபத்தில் தொண்டர்கள் கூட்டத்தில், அவர் பேசி வேதனைப்பட்டார்.
இதுகுறித்து, அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது:நேருவின் பேச்சும், அழகிரியும் வேதனையும், பா.ஜ., வளர்ச்சியால் எந்த அளவுக்கு, தி.மு.க., கூட்டணி கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன என்பதை காட்டுகிறது. இதனால், பா.ஜ.,வை வீழ்த்த, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வையும் துணைக்கு அழைக்கின்றனர். 'பா.ஜ., கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., உள்ளது. அ.தி.மு.க.,வின் இடத்தை பா.ஜ.,பிடித்து விடும்' என திரும்ப, திரும்ப தி.மு.க.,வினரும், அக்கட்சி ஆதரவாளர்களும் பேசுவதன் பின்னணி இதுதான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.