நாகர்கோவில்: ''நாட்டின் உண்மையான வரலாறு குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்,'' என தமிழக கவர்னர் ரவி பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த தினத்தை கொண்டாடும் விதமாக, பாரதிய இதிகாச சங்கலன் சமிதி தமிழ்நாடு கிளை சார்பில் நாகர்கோவில் இறச்சக்குளம் அமிர்தா பொறியியல் கல்லுாரியில், 'கன்னியாகுமரி தின விழா' நடைபெற்றது.
அந்த அமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணியபிள்ளை தலைமை வகித்தார்.இதில் கவர்னர் ரவி பேசியதாவது:
![]()
|
கடந்த 1947-ல் சுதந்திரம் பெற்ற பின், 'ஆங்கிலேயரின் தோற்றம் தான் இங்கிருந்து சென்றுள்ளது; அவர்கள் விட்டுச்சென்ற பிளவுபடுத்தும் சிந்தனைகள் மாற பல ஆண்டுகள் ஆகும்' என காந்தியடிகள் கூறினார்.
பாரதம் என்றால் ஆன்மிக, கலாசாரம் நிறைந்த பன்முகத்தன்மை கொண்ட நாடு. தவறான வரலாற்று கண்ணோட்டம் இந்தியாவில் இன்னும் உள்ளது. அதை தடுக்க இதுபோன்ற அமைப்புகள் நிறைய விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டும்.
நாட்டின் உண்மையான வரலாறு குறித்து ஆய்வுகள் நடத்த வேண்டும்.வெளிநாட்டவர்கள் வரும் முன் பொருளாதார வளர்ச்சியில் பாரதம் உலகில் முதல் இடத்தில் இருந்தது. உலக பொருளாதாரத்தில் 30 சதவீதம் நம் நாட்டில் தான் இருந்தது. பிரெஞ்ச், டச்சு, போர்த்துக்கீசியர்கள், பிரிட்டிஷார் 150 ஆண்டுகளாக இங்கிருந்து பொருளாதாரத்தை கொள்ளையடித்து கொண்டு போய் விட்டனர். நம் வரலாறு மாற்றி எழுதப்பட்டது, கலாசாரம் தவறாக பரப்பப்பட்டது.
தற்போது உலகம் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகிறது. பொருளாதாரம், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பெரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பிரதமர் மோடி '2047' திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார். இதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியம்.
வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் நாட்டின் பலம். ஆனால் வேற்றுமையை மேற்கத்தியர்கள் பிரிவினையாக சித்தரித்து விட்டனர்.
இந்தியா என்ற குடும்பத்தில் நாம் அனைவரும் ஒரு அங்கம். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்கள், மாணவர்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது.அவர்கள் எதிர் கால இந்தியாவை கட்டமைப்பர் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement