மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீர வசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படாததால், அறிவித்தபடி கும்பாபிஷேகம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2018ல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. இன்னும் சீரமைப்பு பணிகள் தொடங்கவில்லை.சீரமைப்பு பணிகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் 'டெண்டர்' விடப்பட்டும், இறுதி செய்யாமல் இருந்ததே இழுபறிக்கு காரணம்.ஒருவழியாக, திருப்பூர் வேல்முருகன் என்பவருக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே, இந்த ஆண்டு ஜன., 21ல் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், '25 கோடி ரூபாயில் திருப்பணிகள் நடத்தி, இரண்டு ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்' என அறிவித்தார்.கோவிலில் அனைத்து திருப்பணிகளும் முடித்த பிறகே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்தாண்டே நடத்தப்பட்டுஇருக்க வேண்டும்.
வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகள் துவங்காததால் கும்பாபிஷேக திருப்பணிகளும் துவங்கப்படவில்லை. நாமக்கல் மாவட்ட குவாரியில் இருந்து கற்களை மதுரைக்கு எடுத்து வர கனிமவளம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், அம்மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும். ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படாததால் ஒவ்வொரு துறையிலும் அனுமதி பெற கோவில் நிர்வாகம் போராட வேண்டிஇருக்கிறது. ஒரு துறை அனுமதி பெற்றால், அடுத்த துறையின் அனுமதி அதற்குள் காலாவதியாகி விடுகிறது.
இதுபோன்ற நிர்வாக குளறுபடியால் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் திட்டமிட்டபடி நடத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.