அசையாத விழிகள்
பல விலங்குகள், பறவைகளால் கண்களை நாலாபக்கமும் உருட்டிப் பார்க்க முடியும். ஆனால் ஈக்களால் அப்படிப் பார்க்க முடியாது. ஏனெனில் அவற்றின் கண்கள் அசையாதவை. பிறகு எப்படி ஈக்களால் சுற்றிலும் பார்க்க முடிகிறது? கண்களுக்குள் இருக்கும் விழித்திரையை ஈக்களால் அசைக்க முடியும்! இதனால், ஈக்களால் பார்க்க முடிகிறது. ஈக்களின் விழித்திரையை முன், பின், மேலே, கீழே அசைக்க, இரு தசைகள் உள்ளன. இந்த கண்டுபிடிப்பு, 'நேச்சர்' இதழில் வெளியாகியுள்ளது.
360 டிகிரி உணரி!
தானோட்டி கார்கள் சுற்றுப்புறத்தை அறிந்துகொள்ள, லிடார் (LiDaR) உணரிகள் உதவுகின்றன. லேசர் கதிர்களை செலுத்தி, போகும் வழியில் உள்ள அசையும், அசையாப் பொருட்களை உணர்ந்து, மோதலை தவிர்க்கின்றன தானோட்டிகள்.
இதுவரை இரண்டு பரிமாணத்தில் மட்டுமே பார்க்கத் தெரிந்த லிடார்களுக்கு, பொஹாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தற்போது புதிய திறன்களை தந்துள்ளனர். புதிய லிடார் கருவிக்கு இப்போது, முப்பரிமாணத்தில் சுற்றுப்புறத்தை உணரும் திறனும், 360 டிகிரி 'பார்வை'யும் கிடைத்துள்ளது.
குறுக்கெழுத்து பலன்கள்
வயதாக ஆக, நினைவாற்றலும், மூளையின் செயல் திறனும் குறையத் தொடங்குகிறது. இதுபோன்ற குறைபாடுகளை தடுப்பதற்கென்றே சில வீடியோ கேம்கள் வந்துள்ளன.
அவை வயதானோருக்கு மூளைச் சுறுசுறுப்பைத் தரவும் செய்கின்றன. ஆனால், அதைவிட, நாளிதழ்களில் வரும் குறுக்கெழுத்துப் புதிர்களை நிரப்புவது, மூளைத் திறன் குறைவதை தடுத்து நிறுத்துவதில் அதிக பலன் தருகிறது.
கொலம்பியா மற்றும் டியூக் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள், 70 வயதானோரின் மத்தியில் ஓராண்டு நடத்திய ஆய்வின் முடிவு இது.
செயற்கை வைத்தியம்
தசைகளை சிதைக்கும் தன்மை கொண்டது, 'லூ கேரிக்' நோய். இதற்கான புதிய மருந்தினை, 'வெர்ஜ் ஜீனோமிக்ஸ்' புதுமையான முறையில் கண்டுபிடித்துள்ளது.
அந்த மருந்திற்கான புதிய மூலக்கூறுகளை 'கன்வெர்ஜ்' என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உருவாக்கித் தந்துள்ளது. மருந்துக்கான அடிப்படை ஆராய்ச்சி தொடங்கி, மனிதர்கள் மீதானசோதனையை எட்டுவதற்கு, வெறும் நான்கே ஆண்டுகள்தான் பிடித்துள்ளது.
இதற்கு காரணம் செயற்கை நுண்ணறிவே என்கின்றனர் வெர்ஜ் ஜினோமிக்சின் நிறுவனர்கள்.
அன்றே கேட்ட குரல்
நிலத்தில் வாழும், முதுகெலும்புள்ள விலங்குகளுக்கும் பறவைகளுக்கும்தான் குரலோசையால் தகவல் பரிமாறும் திறன் இருந்ததாக விஞ்ஞானிகள் கருதினர்.
ஆனால், சுவிட்சர்லாந்திலுள்ள ஜூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி, ஊர்வன, நிலம்- நீர் என இரண்டிலும் வாழ்வன, நீர் வாழ்வன போன்ற விலங்கினங்களிலும் குரல் ஒலி மூலம் தகவல் பரிமாறும் திறன் இருந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், குரல் தகவல் பரிமாற்றம் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.