கடலின் மிகப்பெரிய விலங்கான நீலத் திமிங்கிலம், கடலில் மிதக்கும் பிளாஸ்டிக்கால் பாதிக்கப்பட்டிருக்கிறதா? இந்தக் கேள்வியுடன் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்சியைத் தொடங்கினர்.
கடந்த 10 ஆண்டுகளாக கலிபோர்னியா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் திமிங்கிலங்களைப் பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்தனர். அதன்படி, நீலத் திமிங்கிலங்கள் கடல் மட்டத்திலிருந்து 50 முதல் 250 மீட்டர் ஆழத்தில் இரையை உண்பவை. அதே மட்டத்தில்தான் பிளாஸ்டிக் மாசு அதிகம் மிதக்கும்.
தவிர, நீலத் திமிங்கிலங்கள் சிறிய மீன் வகைகளை கூட்டம் கூட்டமாக கவ்வி உண்பவை. சிறிய மீன்கள் ஏற்கனவே அதிகமாக பிளாஸ்டிக்கை உட்கொள்ள நேர்கிறது. கூட்டிக் கழித்துப் பார்க்கையில், நீலத் திமிங்கிலங்கள், ஒரு நாளைக்கு ஒரு கோடி பிளாஸ்டிக் துண்டுகளை விழுங்குகின்றன என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.