காற்றில் ஈரப்பதம் மாறுவது இயற்கை. இந்த நிகழ்வை வைத்து ஒரு கட்டிடத்தின் தட்பவெப்பத்தை மாற்றலாம் என்கிறது இஸ்ரேலைச் சேர்ந்த 'தெர்மோடெரா.'
நாம் நீராடிவிட்டு துவட்டுவதற்குள் உடல் சில்லிடக் காரணம், நீர் உடலிலிருந்து ஆவியாவதுதான். நமக்கு வியர்க்கும் போதும் இதனால்தான் உடல் குளிர்ச்சியாகிறது.
இதே நிகழ்வை வைத்து, கட்டிட சுவர்களை குளிர்விக்கவும், கதகதப்பாக்கவும் ஏற்ற ஒரு சுவர் கட்டுமான முறையை உருவாக்கி இருக்கிறது தெர்மோடெரா.
ஹெம்ப்கிரீட் கட்டிகள், சிலிக்கா ஜெல், மரத்தாலான கம்பளி போன்ற பொருட்களை வைத்து சுவர்களை உருவாக்கி, தெர்மோடெராவின் கண்காணிப்பு உணரிகள் மற்றும் கருவிகளை பொருத்திவிட்டால் போதும்.
சுவரிலுள்ள பொருளைவிட சுற்றிலுள்ள காற்று உலர்ந்திருந்தால், சுவரிலுள்ள பொருளிலிருந்து ஈரப்பதம் வெளியேறத் தொடங்கும்.
காற்றில் ஈரப்பதம் இருந்தால், அது கட்டிடத்திலுள்ள பொருளுக்கும் இடம்பெயரும்.
இந்த இடப்பெயர்ச்சியால் குளிர்விப்பும், கதகதப்பூட்டலும் தானாகவே நிகழும். சுவர்களில் உணரிகளை பதித்து இதை கண்காணிக்கும் வசதியையும் தெர்மோடெரா ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.