ஆர்.பி.ஐ., காவல்துறை, பத்திரிகை என பலவற்றிலும் அதிக வட்டி தருகிறோம் என எந்த வகையில் யார் வந்தாலும் ஏமாறாதீர்கள் என்று விழிப்புணர்வு தொடர்ந்து செய்யப்படுகிறது. இருந்தாலும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் ரிஸ்க் எடுத்து சில ஆண்டுகளிலேயே லட்சாதிபதி ஆகிறேன் என பணத்தை முதலீடு செய்து, சில மாதங்களிலேயே ரஸ்க் வாங்கக் கூட முடியாத நிலைக்கு வந்துவிடுகின்றனர்.
இன்றைய தேதியில் முதன்மையான வங்கிகளில் வட்டி விகிதம் என்பது ஒரு லட்சத்திற்கு ஆண்டுக்கு 6,100 ரூபாய். மூத்த குடிமக்கள் என்றால் ரூ.6,600. வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் சில ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் வரை வட்டி வழங்குகின்றன. இந்த வளர்ச்சி போதவில்லை என்பவர்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பங்குசார்ந்த மியூட்சுவல் பண்ட் பக்கம் நகர்ந்து 5 முதல் 10 ஆண்டுகள் முதலீட்டினை தொடர்ந்தால் ஒரு லட்ச ரூபாய் என்பது ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் என்ற கூட்டு வளர்ச்சி அடையக் கூடும். இவை எல்லாம் முதலுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லாத அரசு அமைப்புகளில் கண்காணிப்பின் கீழ் வரக் கூடிய முதலீடுகள், சேமிப்புகள்.
இது பேராசைக்காரர்கள் மற்றும் பொறுமையில்லாதவர்களுக்கு கவர்ச்சிகரமானதாக இல்லை. ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.15 ஆயிரம் தருகிறேன். ரூ.8 ஆயிரம் தருகிறேன் என்றால் ஆசை ஏற்பட்டு அதனை நம்பி பணத்தை போடுகின்றனர். சிலர் பணமில்லை என்றாலும் கடன் வாங்கி, நகையை அடகு வைத்து, பிஎப் பணத்தை எடுத்துக் கூட இது போன்ற பொன்சி திட்டங்களில் பணத்தை போட்டு ஏமாறுகின்றனர். சில மாதங்களுக்கு முன் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் என்ற நிறுவனம் இது போன்ற மோசடியில் ஈடுபட்டு சிக்கியது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ரூ.2,500 கோடியை இங்கு பறிகொடுத்தனர். அதில் முக்கால்வாசி பேர் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள். தற்போது அப்படிப்பட்ட ஒரு மெகா மோசடியின் முனை தெரியத் தொடங்கியிருக்கிறது.
ஹிஜாவு மோசடி
![]()
|
ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற வாயில் நுழையாத பெயரை வைத்து இந்த மோசடியை அரங்கேற்றியிருக்கிறார்கள். முதலில் இந்த நிறுவனம் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதா, இதற்கு கார்ப்பரேட் அலுவலகம் உள்ளதா, என்ன தொழில் செய்கிறார்கள், தொடர்பு எண் போன்ற எந்த ஒரு அடிப்படை தகவலும் இல்லை. அதன் https://hijau.in/about-us/ என்ற தளத்திற்கு சென்றால் தேசியக்கொடியைப் போட்டு தொழில் மேம்பாட்டு ஆலோசனை நிறுவனம் என கூறியுள்ளனர்.
இதன் தலைவர் செளந்தர்ராஜன் என்றும், நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் செளந்தர்ராஜன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை விட இந்திய உணவுக் கழகத்தின் உறுப்பினர் என்றும் போட்டுக்கொண்டிருக்கிறார். இப்படி எல்லாம் வடை சுட்டு வைத்ததால் இவரை பெரிய ஆள் என்றும், இவரது நிறுவனம் மல்டி நேஷனல் கம்பெனி என்றும் நம்பி பலர் பணம் போட்டிருக்கிறார்கள்.
ரூ.1 லட்சத்துக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் ரிட்டர்ன் தருவதாக வாய் வார்த்தையாக விளம்பரம் செய்துள்ளனர். அதன் மூலம் முதலீடு செய்ய வந்தவர்களையே ஏஜென்ட்களாக மாற்றி மேலும் முதலீடுகளை பெற ஊக்குவித்திருக்கிறார்கள். அவ்வாறு பெறும் முதலீடுகளுக்கும் 10 சதவீத கமிஷன் வழங்கியுள்ளனர். இதனால் இவ்விஷயம் தொடர் சங்கிலியாக மாறி தமிழகம் முழுக்க பரவியுள்ளது. குறிப்பாக சென்னை, புதுவை, விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், மதுரை, கோவை போன்ற பகுதி மக்கள் 15% வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை கொட்டியுள்ளனர். ஆரம்பத்தில் சொன்னபடி 15% கமிஷன் தந்துள்ளனர். பின்னர் கடந்த சில மாதங்களாக அவை வரவில்லை. தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து வருகின்றனர். விசாரணை தீவிரமடையும் போது தான் எத்தனை ஆயிரம் கோடி மோசடி நடந்திருக்கிறது என்பது தெரிய வரும்.