கண்ணுார், காரில் சாய்ந்ததற்காக 6 வயது சிறுவனை சரமாரியாக உதைத்துத் தள்ளிய வாலிபர், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கடும் கண்டனத்துக்குப் பின் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, கண்ணுார் மாவட்டம் தலச்சேரியில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறது. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மீது சாய்ந்து நின்றான்.
![]()
|
சற்று நேரத்தில் அங்கு வந்த அந்தக் காரின் உரிமையாளரான ஒரு வாலிபர், அந்தச் சிறுவனை சரமாரியாக உதைத்து தள்ளி விட்டார். சிறுவன் நிலைகுலைந்து கீழே விழுந்தான். பின் அந்த வாலிபர் காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டார்.
தங்கள் குழந்தையை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு அந்தச் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாலிபரின் இந்த கொடூரச் செயல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோ 'டிவி'க்களிலும் செய்தியாக வெளியானது.
இதற்கு ஏராளமான பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து, அந்த வாலிபரை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து, கார் எண்ணை வைத்து முகமது ஷிஹ்ஷாத், 20, என்ற வாலிபரை பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி விட்டு விடுவித்தனர்.
மனிதாபிமானமற்ற செயலை செய்த வாலிபரை விடுவித்த போலீசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் சதீஷன், மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, முகமது ஷிஹ்ஷாத்தை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து, மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில் “காரில் சாய்ந்ததற்காக சிறுவனை அடித்து உதைத்து தள்ளியது கொடுமையானது. குற்றவாளி மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், “பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, அந்தச் சிறுவன் மற்றும் அவரது பெற்றோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்,” என்றார்.