சென்னை ;பதிவு செய்த அரசியல் கட்சிகளில், 23 தமிழக கட்சிகள் எங்கிருக்கின்றன என்பதே தெரியாமல், தேர்தல் கமிஷன் தவித்து
வருகிறது.
அரசியல் கட்சி துவக்குபவர்கள், தேர்தல் கமிஷனில் பதிவு செய்வர். பதிவு செய்யப்பட்ட கட்சி, 10க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டால், தனி சின்னம் பெற வாய்ப்புள்ளது.
குறிப்பிட்ட அளவு எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் அல்லது குறிப்பிட்ட சதவீத ஓட்டுகளைப் பெற்றால், தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளிக்கும். அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்கப்படும்.
![]()
|
தமிழகத்தில் மொத்தம் 233 கட்சிகள், தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் ஒற்றை இலக்கத்திலான கட்சிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன; மற்ற கட்சிகள் பெயரளவுக்கே உள்ளன. பெரும்பாலான கட்சிகள், 'லெட்டர் பேடு'கள்.
தேர்தல் கமிஷனில் பதிவு செய்த கட்சிகள், நன்கொடை வசூலிக்கின்றன. அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பணம் வசூலுக்காகவே, சிலர் கட்சிகளை துவக்கி வைத்துள்ளனர்.
முறைகேடாக அரசியல் கட்சிகள் பணம் பெறுவதை தடுக்க, தேர்தல் கமிஷனில், வரவு -- செலவு கணக்கை சமர்ப்பிக்கவும், வருமான வரி தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாத கட்சிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு விளக்கம் பெறப்படுகிறது.
தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட, 233 கட்சிகளில், 23 கட்சிகள் உண்மையிலேயே உள்ளதா என்பதே தெரியாத நிலை உள்ளது. இக்கட்சிகள் அளித்த முகவரியில், அவை செயல்படவில்லை. கட்சிக் கணக்கு சமர்ப்பிக்கும்படி, தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீஸ் திரும்பி வந்து விட்டது.
இதன் காரணமாக, அக்கட்சிகள் பதிவு பெற்ற கட்சிகள் பட்டியலில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு உள்ளன.அதேபோல், பதிவு பெற்ற கட்சிகளில், 22 கட்சிகள் எந்தவித செயல்பாடுகளும் இல்லாமல் உள்ளன. அவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
சம்பந்தப்பட்ட கட்சி நிறுவனர்கள் உரிய பதில் அளித்தால், அவை பதிவு பெற்ற கட்சிகள் பட்டியலில் தொடரும். இல்லையெனில், பதிவு பெற்ற கட்சிகள் பட்டியலில் இருந்து விலக்கி வைக்கப்படும்.கட்சிகளின் பதிவை ரத்து செய்ய, தற்போது தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லாததால், எந்தவித செயல்பாடும் இல்லாத கட்சிகளை, பதிவு பட்டியலில் இருந்து விலக்கி வைக்க மட்டுமே முடியும்.
இக்கட்சிகளின் பட்டியல், தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.