புதுடில்லி டில்லி திஹார் சிறையில் பாதுகாப்புடனும், சகல வசதிகளுடனும் இருக்க, 10 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக கைதி சுகேஷ் சந்திரசேகர் புகார் அளித்ததை அடுத்து, சிறைத்துறை இயக்குனர் ஜெனரல் சந்தீப் கோயல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை, தினகரனுக்கு வாங்கித் தரும் விவகாரத்தில், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் என்பவர் புதுடில்லியில் கைது செய்யப்பட்டார்.கர்நாடகாவைச் சேர்ந்த இவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் உள்ளன.
![]()
|
புதுடில்லியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் குடும்பத்தினரிடம், 200 கோடி ரூபாய் மோசடி செய்து பறித்த வழக்கும் இவர் மீது உள்ளது.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ், புதுடில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் ஒன்றை சமீபத்தில் எழுதினார்.
அதில், சிறையில் பாதுகாப்பாகவும், சகல வசதிகளுடன் இருப்பதற்கு, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு 10 கோடி ரூபாய் கொடுத்ததாகவும், சிறைத்துறை இயக்குனர் ஜெனரல் சந்தீப் கோயலுக்கு 12.50 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவித்து இருந்தார். இது, டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புகாருக்கு ஆளான ஐ.பி.எஸ்., அதிகாரியும், சிறைத்துறை இயக்குனர் ஜெனரலுமான சந்தீப் கோயலை பணி இடமாற்றம் செய்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அவரை உடனடியாக போலீஸ் தலைமையகத்துக்கு வரும்படி உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய சிறைத்துறை இயக்குனர் ஜெனரலாக, ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சய் மெனிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.