கோவை :'கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள்
கிடைத்தன' என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது.
கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.
![]()
|
கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி
பதிவாகியுள்ளது.'கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன' என்கின்றனர் போலீசார்.'சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார்.
'அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும்.
ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர்.
கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது.தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார்
திட்டமிட்டுள்ளனர்.