சென்னை: வடகிழக்கு பருவமழையால், சென்னையில் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. பல்வேறு துறைகள் தோண்டிப்போட்டதால் உருக்குலைந்த நிலையில், சாலைகளை சீரமைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
சாலைகள் சீரமைப்புக்கு வார்டுக்கு 5 லட்சம் ரூபாய் மற்றும் ஜல்லி, மணல், தார் கலவை ஆகியவை மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்டும், இவற்றை முறையாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
சென்னையில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
![]()
|
மேலும், மின்சார வாரியம் சார்பில் 'கேபிள்'களை புதைவடத்தில் கொண்டு செல்லுதல், குடிநீர் வாரியம் சார்பில் குழாய் புதைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
பெயரளவு பணி
இப்பணிகள் முடிந்த பல்வேறு சாலைகளில் தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.
மேலும், மாநகராட்சி சார்பில், வார்டுக்கு 5 லட்சம் ரூபாய் வீதம், 2௦௦ வார்டுகளுக்கு மொத்தம் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இத்துடன் ஜல்லி, மணல், தார் கலவை உள்ளிட்டவையும் தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டன.
![]()
|
ஆனால், இவற்றில் பெயரளவில் மட்டுமே பணிகள் நடந்தன. குறிப்பாக, கான்கிரீட் அல்லது தார் கலவை போடாமல், பல சாலை பள்ளங்கள், மணல், ஜல்லி கற்கள் கொண்டு மட்டுமே சீரமைக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் வடகிழக்கு பருவமழை துவங்கி, அக்., 31ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இம்மழையால், சரியாக சீரமைக்கப்படாத மாநகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் சல்லி சல்லியாக சிதைந்து விட்டன. பல்லாங்குழி போல பள்ளம், மேடாக காட்சியளிக்கின்றன.
விபத்து அபாயம்
குறிப்பாக, தி.நகர் திருமலை சாலை, அண்ணா நகர் சாந்தி காலனி 13வது பிரதான சாலை மற்றும் உட்புற சாலைகள், திருமங்கலம் மேம்பாலம் கீழ் உள்ள சர்வீஸ் சாலைகள் மோசமான நிலையிலுள்ளன.
திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அம்பத்துார் தொழிற்பேட்டை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் சாலைகள் பள்ளம், மேடுகளாக மாறி பல்லாங்குழி போல காட்சியளிக்கின்றன. மழை நேரத்தில் நீர் நிரம்பி விடுவதால், பள்ளம் இருப்பதை அறியாமல், பலர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மேலும், மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை மூடிகள் பல இடங்களில் உடைந்த நிலையில் உள்ளன. 'சென்டர் மீடியன்'களில் உள்ள மின் 'கேபிள்'களும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.
இதனால், தேங்கிய மழை நீரை உடனே அகற்ற தீவிரம் காட்டும் தமிழக அரசும், மாநகராட்சியும், மழைக்கால விபத்துகளை தவிர்க்கும் வகையில், போர்க்கால நடவடிக்கையாக சாலை சீரமைப்பு பணியிலும் கவனம் செலுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
![]()
|
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வடசென்னை பகுதியில் உட்புற சாலைகளில் மழைநீர் தேங்க காரணமாக இருந்த காந்தி கால்வாய் உள்ளிட்டவை, இரண்டாவது முறையாக துார் வாரப்பட்டு வருகிறது.பள்ளம், மேடுகளாக உள்ள சாலைகளை சீரமைக்கும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல், மழைக்காலம் முடியும் வரை, மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளில், 24 மணி நேரமும் 'மோட்டார் பம்பு'கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.மழை பெய்ய துவங்கியதும், நீர் தேங்காமல் உடனடியாக மோட்டார் வாயிலாக வெளியேற்றப்படும். மழைநீர் முழுமையாக வெளியேற்றப்பட்ட பின் தான், மோட்டார்களின் இயக்கத்தை நிறுத்த வேண்டும் என, பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது, 763 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. இதில், 168 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.