திருச்சி: ''வரும் 2024ல் நடைபெறும் தேர்தலில், கருப்பு, சிவப்பா? காவியா? என்று பார்த்து விடுவோம்,'' என திருச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக எம்.பி., ராசா பேசினார்.
திருச்சி தி.மு.க., சார்பில், ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க., துணை பொதுச் செயலாளரும், நீலகிரி எம்.பி.,யுமான ராசா பேசியதாவது:
திருச்சியில் நடந்த முதல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை, ஈ.வெ.ரா., தமிழர் எழுச்சி மாநாடாக அறிவித்தார். ஹிந்தி வாயிலாக ஹிந்துத்துவாவை கொண்டு வந்து, தமிழரின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கின்றனர். ஜாதியும், மதமும் நம்மை பிரிக்கும்; ஆனால், மொழி மட்டும் தான் நம்மை ஒன்று சேர்க்கும்.

பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலினை பார்த்து பயப்படுகிறார். அவரது காரில் செல்வதால், என்னை பார்த்தும், கருப்பு, சிவப்பு கரை போட்ட வேட்டியை பார்த்தும் பயப்படுகிறார். வரும் 2024ல் நடைபெறும் தேர்தலில், கருப்பு, சிவப்பா? காவியா? என்று பார்த்து விடுவோம்.
அன்று ஈ.வெ.ரா, அண்ணாத்துரை, கருணாநிதி போன்றவர்களுக்கு எதிராக வந்த ஹிந்துத்துவா இன்று பல மடங்கு வளர்ந்து, ஸ்டாலினுக்கு எதிராக வந்துள்ளது. ஆனால், அவர்கள் மூவரும் இணைந்த ஒரே சக்தியாக, சங்பரிவாரையும், ஹிந்துத்துவாவையும் எதிர்த்து நிற்கிறார் ஸ்டாலின்.
மூத்த இனம்
பண்பாடுகள் வேறு வேறு, மொழி வேறு வேறு என்பதால், ஹிந்தியை எதிர்க்கிறோம். மதம் நம்மை காப்பாற்றவில்லை; மொழி தான் நம்மை காப்பாற்றுகிறது. மொழி தான் நம்மை ஒன்று சேர்க்கும். மதத்தாலும், ஜாதியாலும் பிரிந்து கிடந்தவர்களை மொழியால் ஒரு குடைக்குள் கொண்டு வந்த பெருமை இந்த இயக்கத்துக்கு உண்டு.
இரண்டு பண்பாடுகளில் ஒன்று, எங்கள் கலாசார பண்பாட்டு அடையாளத்தை அழிக்கப் பார்க்கிறது. மொழி வழி இனங்களில் பழமையான மூத்த இனம் தமிழினம்.
மதம் என்றால் தவறு இருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். தவறை ஒத்துக் கொள்ள மாட்டோம், என்று அவன் சொல்கிறான். ஒத்துக் கொள்ளாவிட்டால் உதை விழும், என்று நாங்கள் சொல்கிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.