துாங்கும் தமிழக அரசு நிர்வாகம்!
அ.பன்னீர்செல்வம், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தை ஆளும் பொறுப்பை ஏற்றுள்ளவர்கள், ஆட்சி புரிவதை தவிர சிலை வடிப்பது, மணிமண்டபம் கட்டுவது, நுாலகம் அமைப்பது, நடுக்கடலில் பேனா சிலை நிறுவுவது, கிழக்கு கடற்கரை சாலையில், 'ஸ்போர்ட்ஸ்' சைக்கிள் ஓட்டுவது, திரைப் படங்கள் பார்ப்பது போன்ற ஏனைய வேலைகள் அனைத்தையும் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றனர்.
இதுவரை, 'தமிழ்... தமிழ்...' என்று முழக்கமிட்டு கொண்டிருந்தவர்கள், தற்போது புதிதாக, 'ஈ.வெ.ரா., மண்; திராவிட மாடல் ஆட்சி...' என்ற இரு வார்த்தைகளை கூறி, வேடிக்கை காட்டவும் துவங்கி உள்ளனர்.
இந்த திராவிட மாடல் ஆட்சியில், கோவையில் உள்ள ஈ.வெ.ரா., மண்ணில், தீபாவளிக்கு முதல் நாள் இரவு, சக்தி வாய்ந்த கார் குண்டு வெடித்தது.
இயன்ற வரை இச்சம்பவத்தை மூடி மறைக்க முயன்றும், வெடிச் சத்தம் காட்டிக் கொடுத்ததில், தற்போது புதிது புதிதாக கயிறு திரிக்க துவங்கி உள்ளனர். சம்பவம் நடந்து சில நாட்களாகியும், முதல்வரிடம் இருந்து எந்த ஒரு, 'ரியாக் ஷனும்' இன்னும் வரவில்லை.
கடந்த மாதம், கட்சியின் பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின், 'கட்சியினரின் செயல்பாடுகளால் எனக்கு துாக்கம் வரவில்லை' என்று புலம்பியதை, தமிழக மக்கள் அனைவரும் நன்கறிவர்.
கோவை கார் குண்டு வெடிப்பு, அவரின் துாக்கத்தை மேலும் கெடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
முதல்வர் பதவியை அலங்கரிக்க ஆசைப்பட்டால் மட்டும் போதாது... அந்தப் பதவிக்குரிய பொறுப்பும், நிர்வகிக்கும் திறமையும் மிக மிக முக்கியம்.
கடந்த 1958 ஜூன் 22ல், எம்.ஜி.ஆர்., நடித்து, இயக்கிய, நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய, 'துாங்காதே தம்பி துாங்காதே...' என்ற பாடல் இடம் பெற்றது.
இன்று பல விஷயங்களில் துாங்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசின் நிர்வாகத்திற்கு, அந்த பாடல் பொருத்தமாக இருக்கும்.
எல்லாம் 'சென்டிமென்ட்' படுத்தும் பாடு!
என்.மல்லிகை மன்னன்,
மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தஞ்சையில், உலகமே
வியக்கும் வண்ணம் பிரகதீஸ்வரர் கோவிலை கட்டி பெரும் புகழ் பெற்ற ராஜராஜ
சோழனின், 1,037வது பிறந்த நாள் விழா, ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில்,
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ராஜராஜ சோழனின்
பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
செய்தால், தங்களின் பதவி பறிபோய் விடும் என்ற, 'சென்டிமென்ட்' நீண்ட
நாட்களாக உள்ளது. இதன் காரணமாக, அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் நேரில்
சென்று பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதில்லை.
இந்த ஆண்டு ராஜராஜ
சோழனின் பிறந்த நாள் விழாவில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்
சேகர்பாபுவும், அமைச்சர் மகேஷும் பங்கேற்பதாக அழைப்பிதழில்
குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், மழையின் காரணமாக பங்கேற்கவில்லை என்று
காரணம் கூறி, விழாவை புறக்கணித்து, 'ஜகா' வாங்கி விட்டனர் இருவரும்.
முதுகு
வலி, காய்ச்சல் காரணமாக, தேவரின் பிறந்த நாள் விழாவை புறக்கணித்த முதல்வர்
ஸ்டாலின், ராஜராஜ சோழனின் அருமை பெருமைகளை பாராட்டி அறிக்கை
வெளியிட்டுள்ளார். அதில், 'ராஜராஜ சோழனின் பிறந்த நாள், இனி அரசு விழாவாக
கொண்டாடப்படும்' என்றும் அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பை கேட்டு,
அமைச்சர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பர் என்பதில் சந்தேகமில்லை.
முதல்வர்
கருணாநிதி காலத்தில், தஞ்சை பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகம் நடந்த
போது, யாகசாலையில் போடப்பட்ட பந்தல் தீப்பிடித்து எரிந்தது, அபசகுனமாகப்
பார்க்கப்பட்டது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற
கும்பாபிஷேகத்தில் பங்கேற்றதால், தமிழ்க்குடிமகனின் அமைச்சர் பதவி
பறிபோனதாக கூறுவர். சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாத திராவிட
செம்மல்கள், ராஜராஜ சோழனின் பிறந்த நாள் விழாவில் துணிந்து பங்கேற்காமல்,
'சென்டிமென்ட்' பார்த்து ஓட்டம் பிடிப்பதை பார்த்தால், நம்மால் விழுந்து
விழுந்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இவர்கள் எல்லாம், 'நாங்கள்
ஈ.வெ.ரா., வழி வந்தவர்கள்' என்று சொல்லிக் கொள்ளவே லாயக்கற்றவர்கள்.
ஆளும்
கட்சியினர் போல, 'ராஜராஜன் ஹிந்து மன்னன் இல்லை' என்று சொன்ன கூட்டணி
கட்சிகளின் வீராதி வீரர்களும், அவரின் பிறந்த நாள் விழாவில் துணிந்து
பங்கேற்கவில்லை. எல்லாம், 'சென்டிமென்ட்' படுத்தும் பாடு.
இரும்புக்கரத்தால் ஒடுக்குங்க!
ஏ.எம்.ஏ.ராஜேந்திரன், காளையார்கோவில், சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகம் ஏற்கனவே மதுவுக்கு அடிமையாகி விட்டது; இப்போது, போதைக்கும் அடிமையாகி வருகிறது. குறிப்பாக, தமிழக இளைஞர்களிடம் போதை பழக்கம் அதிகமாகி வருகிறது.
போதை தரக்கூடியவை யாக, கஞ்சா, கஞ்சா லேகியம், கொகைன், ஹெராயின், மெபட்ரோன், மாவா, போதை சாக்லெட், குட்கா என, பல பொருட்களை கூறிக் கொண்டே போகலாம். போதைக்கு புதிய கண்டுபிடிப்புகள் ஏராளம்.
கஞ்சாவானது ஆந்திரா, நாகலாந்து மாநிலங்களில் இருந்தும், கொகைன், ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் ஆப்கானிஸ்தான், உகாண்டா, தான்சானியா, எத்தியோப்பியா நாடுகளில் இருந்தும் கடத்தி வரப்படுகின்றன.
இதில், ஒரு அதிசயம் என்னவென்றால், எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னைக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் தான் விமான சேவை துவக்கப்பட்டது.
அதன்பின், நான்கு மாதத்தில் மட்டும், 131 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளன. அதிலும், ஆகஸ்ட் மாதத்தில், 10, 12, 13, 16ம் தேதிகளில், நான்கு முறை போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டு பிடிபட்டுள்ளன.
தமிழக காவல் துறையும், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவும், எவ்வளவு விழிப்புணர்வோடு செயல்பட்டாலும், அதையும் மீறி போதைப் பொருட்களை கடத்தி வருவது தொடர்கிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், எத்தனை கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகின்றன என்பது, சட்டப்பூர்வமாக, தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிந்து விடும்.
ஆனால், மதுவை காட்டிலும் அதிகம் விற்பனையாகும், போதைப் பொருட்களின் அளவும், அவற்றின் விற்பனை மதிப்பும் யாருக்கும் தெரியாது.
தமிழகத்தில் விற்கப்படும் போதைப் பொருட்கள் வாயிலாக, திரட்டப்படும் கோடிக்கணக்கான ரூபாய் எங்கே, எப்படி, யாருக்குப் போகிறது என்பதை கண்காணிக்க வேண்டும்.
இரு ஆண்டுகளுக்கு முன்னரே, சர்வதேச போலீசார், 'போதைப் பொருட்கள் கடத்தலுக்கு ஏற்ற இயற்கையான அமைப்பை உடைய மாநிலம் தமிழகம்' என்று எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தின் கடல் எல்லை, 1,300 கி.மீ., நீளம். அருகில் இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகள் உள்ளன. அங்கிருந்தும் கடல் மார்க்கமாக போதைப் பொருட்கள் கடத்தி வரப்படலாம்.
எனவே, தமிழக காவல் துறையும், மத்திய புலனாய்வு துறையும், கடலோர காவல் படையினரும், இன்ன பல அரசு அமைப்பினரும், போதைப் பொருட்கள் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லையேல், இளைய தலைமுறையினர், போதை தலைமுறையினராகி விடுவர்.
lll