வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: ''கோவை கார் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட ஒற்றை நபரை இயக்கியது யார் என்பது குறித்த உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்,'' என, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா கூறினார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் ஜவஹிருல்லா சந்தித்தார். பின்னர், அவர் கூறியதாவது:
கடந்த, 1998ல் நடந்த குண்டு வெடிப்பால், கோவை மக்கள் பாதிக்கப்பட்டு, மீண்டும் சகஜநிலை திரும்ப பல ஆண்டுகளானது. கார் வெடிப்பு போல், வேறு சம்பவங்கள் நடக்க கூடாது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒற்றை நபரை இயக்கியது யார், இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்துவதன் பின்னணி என்ன, என்பது குறித்து உண்மை வெளிக்கொண்டு வரவேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பே இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்க கூடிய நோக்கில் செயல்படக்கூடியது. அதன் ஆதரவாளர்களாக இருப்பவர்கள், அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்.

இதுபோன்ற மன நிலையில் உள்ளவர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் கொடுக்க போலீஸ் தயாராக உள்ளது. போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர். கார் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ., எப்படி விசாரிக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான்.தமிழக போலீசாரே விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.