சென்னை: ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சமூக நீதி போராட்டத்துக்கு பின்னடைவு என முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தது,
இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இந்த தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: இந்த தீர்ப்பு சமூக நீதி போராட்டத்துக்கு பின்னடைவு. சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்திற்கு ஒரு பின்னடைவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அமைந்துள்ளது.

சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். சமூகநீதிக்கு எதிரான முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.