சாயல்குடி : வீட்டுக்கு வீடு சென்று எம்.பி., எம்.எல்.ஏ., பாத்திரங்களை துலக்க முடியாது, என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் துறைமுகத்தில் மீனவர்களுக்கு மானிய விலை டீசல் பங்க் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன் பங்கேற்றனர்.
விழா மேடையில் ராஜ கண்ணப்பன் பேசியது: அரசு மீதும், நிர்வாகம் மீதும், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதும் பொதுமக்களிடம் இருந்து விமர்சனங்கள் வருவது இயல்பு. அதற்காக எம்.பி., எம்.எல்.ஏ., என்ன செய்ய முடியுமோ அது எங்களுக்கு தெரியும். அதற்காக வீட்டுக்கு வீடு சென்று பாத்திரங்களை துலக்க முடியாது.

காரியங்கள் வரும் போது சரியாக இருந்து பண்ணனும். இந்த தொகுதி எம்.பி., நவாஷ்கனி அவரால் என்ன செய்ய முடியுமோ அதை முடிந்தளவு செய்து கொண்டு இருக்கிறார், என்றார். அமைச்சரின் பேச்சு விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அமைச்சர் பொன்முடியின் 'ஓசி பஸ்' பேச்சு உள்ளிட்ட அமைச்சர்களின் வரம்பு மீறிய பேச்சால் ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் பொது மேடையில் புலம்பிய நிலையில், தற்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.