மதுரை : கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை பா.ஜ., கையில் எடுத்ததால் தான், உண்மை வெளியே வந்தது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். வேறு பெயர்களில் அதனை கொண்டு வருகின்றனர். அதனை எந்த பெயரில் கொண்டு வந்தால் என்ன ?
அமைச்சர் பொன்முடி முதலில் தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும். புதிய கல்விக்கொள்கையில், ஹிந்தி மொழி ஒரு வாய்ப்பாக தான் உள்ளது. ஹிந்தி திணிப்பு இருக்கக்கூடாது என்பது தான் பிரதமரின் விருப்பம்.மருத்துவம், பொறியியல் படிப்புகள் தமிழில் வேண்டும் என முதலில் கேட்டது பா.ஜ., தான்.
கோவை கார் குண்டுவெடிப்பு பா.ஜ., கையில் எடுத்ததால் தான் உண்மை வெளியே வந்துள்ளது. இதனை மறைத்தது தி.மு.க.,. இந்த விவகாரத்தை பத்திரிகைகளின் துணையுடன் பா.ஜ., இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்காவிட்டால், சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பம் பாவம் எனக்கூறி, அவர்களில் ஒருவருக்கு திமுக, அரசு வேலை கொடுத்திருக்கும்.

மது கஞ்சா பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. மது, போதை கலாசாரம் ஒழித்தால் இளைஞர்கள் சமுதாயத்தோடு ஒன்றிணைவார்கள். இல்லாவிட்டல் இரு தரப்பும் வேறு வேறாக செயல்படும். தற்போது அது தான் அதிகரித்துள்ளது.
லாத்தியை பூஜை செய்வதற்காகவா போலீஸ் வைத்துள்ளனர். அதற்கு என மகத்துவம் உண்டு. அதனை பயன்படுத்த வேண்டிய இடத்தில் பயன்படுத்த வேண்டும். எங்கு தேவையோ அங்கு இருக்க வேண்டும். இதற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் ஆதரவு அளிக்க வேண்டும்.
போலீசுக்கு தமிழக பா.ஜ., முழு ஆதரவு அளிக்கும். போலீஸ் துறை சீரழிந்தால் சமுதாயம் கெடும். அதனை கட்டுப்படுத்தினால், ரவுடிகள், பெண்களை ஆபாசமாக பேசுபவர்கள், மது, கஞ்சா அட்டகாசத்தை அடக்க முடியாது. போலீஸ் கையை கட்டினால் நிலைமை விபரீதமாக இருக்கும்.
தற்போது பலர் மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து வருகின்றனர். இதனால், லாத்தியை எடுக்கவும், அதட்டி பேசவும் போலீசார் பயப்படுகின்றனர். சாத்தான்குடி, தூத்துக்கும் போன்ற சம்பவங்கள் தவறு. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.