புதுடில்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆனதையடுத்து காங்கிரஸ் எம்.பி., ராகுல், 'இந்த நடவடிக்கையால் கருப்புப் பணம் வரவில்லை, வறுமைதான் வந்தது' என விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பதாக அறிவித்தார். பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகள் திரும்பப்பெற்றன. அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் 50 நாட்களில் கருப்பு பணத்தை ஒழித்துவிடுவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், இந்த நடவடிக்கை தோல்வி அடைந்ததாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் (நவ.,8) ஆறு ஆண்டுகள் நிறைவடைந்தன. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளதாவது:
கருப்புப் பணம் வரவில்லை, வறுமைதான் வந்தது. பணமில்லா பொருளாதாரம் ஆகவில்லை, பொருளாதாரம் பலவீனமானது. ஒழிந்தது பயங்கரவாதம் அல்ல, கோடிக்கணக்கான சிறு தொழில்கள் மற்றும் வேலைகள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையில், 'ராஜா' '50 நாட்கள்' வாக்குறுதியுடன் பொருளாதாரத்தை ஒழித்து விட்டார். இவ்வாறு பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
Advertisement