சென்னை : வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக மனைகள் ஒதுக்கீடு பெற்று, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட வழக்கில், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஜாபர்சேட் மனைவி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் மகன் ஆகியோருக்கு சொந்தமான, 14.23 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
தமிழக காவல் துறையின் ஐ.பி.எஸ்., அதிகாரியான ஜாபர் சேட், தீயணைப்பு துறை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர், 2006 - 11ல் நடந்த, தி.மு.க., ஆட்சியில், உளவுத்துறை தலைமை பொறுப்பில் இருந்தார்.
![]()
|
இவர், 2008ல், தன் மனைவி பர்வீன் ஜாபர்சேட் பெயரில், 'சமூக சேவகர்' எனக் கூறி முறைகேடாக, வீட்டு வசதி வாரியத்தின் பெசன்ட் நகர் கோட்டத்தில், திருவான்மியூர் புறநகர் திட்டம் காமராஜர் நகரில், மனை ஒதுக்கீடு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோல, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் உதவியாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் பெயருக்கு, ஜாபர் சேட் மனைவிக்கு ஒதுக்கப்பட்ட மனைக்கு அருகே நிலம் ஒதுக்கப்பட்டது.
இந்த இரு மனைகளும், மொத்தம், 9,424 சதுரடி கொண்டவை. இதில், இரு தரப்பினரும் கட்டுமான நிறுவனத்தை துவங்கி, வர்த்தக நோக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிட்டு, 2009ல் பணிகளை துவங்கினர். சதுரடி, 8,000 - 10 ஆயிரம் ரூபாய் வரை விற்றுள்ளனர்.
இதனால், சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் சுருட்டி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வந்தனர். முறைகேடு நடந்தபோது, வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தவர் பெரியசாமி; தற்போது, கூட்டுறவு துறை அமைச்சராக உள்ளார்.
பர்வீன் ஜாபர் சேட், இவரது கணவர் ஜாபர் சேட், வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளராக பணிபுரிந்த முருகையா, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் ராஜ மாணிக்கம், இவரது மகன் துர்கா சங்கர், கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த உதயகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இவர்கள், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்கு பதிந்து, ஜாபர் சேட், துர்கா சங்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.விசாரணையில், இவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டதை உறுதிசெய்தனர். அதன் அடிப்படையில், பர்வீன் ஜாபர் சேட், துர்கா சங்கர், உதயகுமார் ஆகியோருக்கு சொந்தமான, 14.23 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முடக்கி உள்ளனர்.