ஓசூர்: ஓசூரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் காந்திக்கு, மேயர் சத்யா, 10 சவரன் தங்க செயின் அணிவித்தபோது, கடுப்பாகிய அமைச்சர், அதை உடனடியாக கழற்றினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர, தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம், அவைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மாநகர செயலர் மேயர் சத்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி, மேற்கு மாவட்ட செயலர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஆகியோர் பேசினர்.
ஓசூர் மாநகராட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தேர்தல் பொறுப்பாளர்களுக்கு, மேயர் சத்யா, கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கினார். கூட்டத்தில், ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து, ஒரு லட்சம் துண்டு பிரசுரங்களை அடிச்சடித்து வீடுகள் தோறும் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, அமைச்சர் காந்தி மற்றும் மேற்கு மாவட்ட செயலர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஆகியோருக்கு, மேயர் சத்யா மாலை அணிவித்து, தலா 10 சவரன் தங்க செயினை அணிவித்தார். தன்னை மாநகர செயலராக நியமிக்க பரிந்துரைத்ததற்காக, இதை அவர் செய்தார் என கூறப்படுகிறது.
![]()
|
'இது எதற்கு...' என்பது போல 'ரியாக் ஷன்' செய்த அமைச்சர் காந்தி, அந்த தங்க செயினை உடனடியாக தன் கழுத்திலிருந்து கழற்றி, தன் பாதுகாவலரிடம் கொடுத்தார். இது, மேயர் சத்யாவை அதிர்ச்சியடைய செய்தது.
தொடர்ந்து பேசிய அமைச்சர் காந்தி, ''கடைக்கோடியில் உள்ள தொண்டனுக்கு செய்யுங்கள்... அப்போது தான் கட்சி வலுப்பெறும். அவன் இல்லையென்றால் நாம் இல்லை,'' எனக் கூறினார்.
இது, ஓசூரில், தொண்டர்களை கட்சி நிர்வாகிகள் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை வெளிச்சம் போட்டு காட்டியதாக, கட்சியினர் கூறினர்.