வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
ஜி.சூரிய நாராயணன், விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு இயக்கம், 100 ஆண்டுகளாக செயல்படுகிறது. இதுவரை, ஒரு தீயவரை கூட அந்த இயக்கம் உருவாக்க வில்லை. பிளவு படா இயக்கமாகவும் உள்ளது; தன் பரிவார அமைப்புகளுடன் இணைந்து, எண்ணிலடங்கா சேவைகளை செய்துள்ளது. ஓரிடத்தில் பேரிடர் என்றால், இந்த அமைப்பினர் தான் முதலில் நிற்பர். கொரோனா தொற்று பரவல் காலத்தில், இந்த அமைப்பினர் ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது.
இவர்கள் சீருடையுடன் அணிவகுத்து வந்தால், அந்த அழகே தனி. அந்த இயக்கத்தின் பெயர், 'ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம்' என்ற ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு.
'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், எங்களின் கொள்கைக்கு மாறானவர்கள்; அவர்கள் வளர்வது எங்கள் கட்சிக்கு ஆபத்து-. இது, எங்களின் ஆட்சி; எனவே, ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்திற்கு அனுமதி தர முடியாது' என்று சொல்ல தமிழக அரசுக்கு உரிமையுள்ளது.
ஆனால், 'இவர்கள் அணிவகுப்பு நடத்தும் அதே நாளில், இன்னொரு அரசியல் வியாபாரியும், ஏதோ ஒரு வித நிகழ்வை நடத்தப் போகிறார்; அதனால், அனுமதி கொடுக்க முடியாது' என்று கூறுவதும், வேறு சில காரணங்களை காட்டி, அப்பாடா தடுத்து விட்டோம் என்று பெருமூச்சு விடுவதும், தி.மு.க., ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய கேவலம்.
![]()
|
கடலுார் உள்ளிட்ட மூன்று இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் அணிவகுப்பு மிக அமைதியாக மட்டுமின்றி, கட்டுக்கோப்பாகவும் நடந்தேறியுள்ளது. அதனால், 'இப்படிப்பட்ட அமைப்புக்கா, ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்தனர்' என்று கூறி, மக்கள் முகம் சுளிக்கின்றனர்.
தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே... கருத்தை கருத்தால் எதிர்க்க பழகுங்கள்; வீம்புக்காக எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள். ஆரோக்கிய அரசியல், அரசுக்கு மட்டுமல்ல... தேசத்திற்கும் நல்லது!