வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிக்கமகளூரு: கர்நாடகாவில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வந்த பெண்ணின், 'ஹால் டிக்கெட்'டில் பிரபல நடிகை சன்னி லியோன் கவர்ச்சிப் படம் அச்சாகி இருந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
கர்நாடகாவில் மாநில அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா நகரைச் சேர்ந்த ஒரு பெண் விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு ஷிவமொகா நகரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வு மையத்தில் அவரது அனுமதிச் சீட்டை சரிபார்த்த போது, அவரது விபரங்கள் அனைத்தும் சரியாக இருந்தன.
ஆனால், அவரது புகைப்படத்துக்குப் பதில், ஹிந்தி, தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் படம் அச்சாகி இருந்தது. இதையடுத்து, தேர்வு மைய பொறுப்பாளர் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
![]()
|
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பொறுப்பாளர் பி.ஆர்.நாயுடு, ''கர்நாடக மாநில கல்வித் துறை கவனமின்றி செயல்படுகிறது,'' என குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள மாநில கல்வித் துறை அமைச்சர் நாகேஷ், ''தேர்வர்கள் பதிவேற்றும் படம் தான் அனுமதிச் சீட்டில் பதிவாகும்.
''அந்தப் பெண்ணிடம் விசாரித்தோம். தன்னுடைய விபரங்களை, தன் கணவரின் நண்பர் பதிவேற்றியதாக கூறினார். அந்த நபரிடம் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.