இன்று காற்றைப் போல, கட்டடங்களில் 'வை-பை' சமிக்ஞைகள் இருந்தாகவேண்டும். இதற்கு 5 முதல் 20 வாட்டுகள் வரை மின்சாரத்தை உறிஞ்சும் வை பை கருவிகளை கட்டடங்களில் நிறுவுகின்றனர்.
ஆனால், வெறும் ஒரு வாட் மின்சாரத்தை வைத்து வை-பை கருவியை, சவூதி அரேபிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மன்னர் அப்துல்லா அறிவியல் தொழில்நுட்ப பல்கலை விஞ்ஞானிகள், 'ஸ்மார்ட் கிளாஸ்' கண்ணாடிகளை ஜன்னலில் பொருத்துவதன் மூலம் இதை சாதித்துள்ளனர். இக் கண்ணாடிகள் டி.எல்.எஸ்,, எனப்படும், 'இரட்டை செல் திரவப் படிகத் திரை' தொழில்நுட்பத்தைக் கொண்டவை.
இந்த கண்ணாடிகள், சூரிய ஒளியை, தடுக்கவும், வழிவிடவும் செய்கின்றன. அதாவது, 0 மற்றும் 1 என, 'பைனரி' முறையில் தகவல்களை அனுப்புகின்றன. அடுத்து, ஸ்மார்ட் ஜன்னல்களை, ஜிகாபைட் அளவு வேகமாக தகவல்களை பரிமாறும் வகையில் உருவாக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.