இறைச்சிக்காக இயங்கும் கோழி மற்றும் மாட்டுப் பண்ணைகளை ஒழிக்க வந்தன ஆய்வக இறைச்சி தொழில்நுட்பங்கள். 'செல் வேளாண்மை' மூலம் வளர்ந்த ஆய்வகக் கோழி மற்றும் மாட்டிறைச்சிகள் இன்று பர்கர்கள், பிட்சாக்களில் இடம் பிடிக்கத் துவங்கிவிட்டன.
இந்த நிலையில், மீன்களையும் விஞ்ஞானிகள் விட்டுவைக்கவில்லை. இஸ்ரேலைச் சேர்ந்த 'போர்சீ புட்ஸ்,' அருகி வரும் மீன் இனங்களின் தசை செல்களை எடுத்து, அவற்றை ஆய்வகத்தில் வளர்த்து, விற்பனை செய்ய களமிறங்கியுள்ளது.
அதிக மீன்பிடிப்புக்கு ஆளாகி, அழியும் நிலையில் இருக்கும், ஈல் மீன்களின் இறைச்சியை வெற்றிகரமாக வளர்த்தெடுத்துள்ளனர் போர்சீ புட்சின் விஞ்ஞானிகள். ஈல் செல்களை எடுத்து, ஆய்வகத்தில் பெருமளவில் வளர்க்க முடியும் என்பதை நிரூபித்துள்ள இஸ்ரேலிய விஞ்ஞானிகள், வரும் 2025ல் அதை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளனர். இயற்கை ஈல்கள் இனி தப்பிப் பிழைத்துவிடும்.