செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, சமூக நலனுக்கு பயன்படுத்தும் திட்டத்தை கூகுள் செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக, மெக்சிகோ, கனடா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியில், வனப்பகுதிகளில் காட்டுத்தீ எச்சரிக்கை வரைபடங்களை கூகுள் வெளியிடத் துவங்கியுள்ளது.
காட்டுத்தீயை அடையாளம் கண்டு, அது எந்த அளவு பரவியுள்ளது, எந்த திசைகளில் பரவும் தீயின் தீவிரம், காற்றின் வேகம் போன்ற பல தகவல்களை நிகழ் நேரத்தில் அந்த வரை படம் மூலம் கூகுள் தருகிறது.
செயற்கைக் கோள் புகைப்படங்களை, செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அலசி, காட்டுத் தீ பரவல் குறித்த கணிப்புகளை நிமிடத்திற்கு நிமிடம் கூகுள் வெளியிடும்.
அதைப் பார்த்தாலே, எப்படி தீயைக் கட்டுப்படுத்துவது என்பதை, தீயணைப்பு வீரர்களாலும் முன்களப் பணியாளர்களாலும் அறிய முடியும்.
சோதனை அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் முதல், 30க்கும் மேற்பட்ட பெரிய காட்டுத் தீ நிகழ்வுகளை கூகுள் மேப் வழங்கியுள்ளது. கனடா மற்றும் அமெரிக்க வனப்பகுதிகளில் நிகழ்ந்த காட்டுத் தீக்களின் வரைபடங்களை 70 லட்சம் பேர் கண்டுள்ளனர்.