சென்னை: ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் பா.ஜ., அரசை ஆதரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளதாக மா.கம்யூ., மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்டத் திருத்தம் செல்லும் என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு அளிக்கப்போவதாக திமுக தலைமை அறிவித்தது. அனைத்துக் கட்சி கூட்டம் நவ.,12ல் நடத்தவும் திமுக அரசு முடிவு செய்தது.
திமுக.,வின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக.,வின் முடிவுக்கு மாறாக பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் பா.ஜ., அரசை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
சென்னை பெரம்பலூரில் நடைபெற்ற அக்கட்சி பேரணியில் பங்கேற்ற மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாதிய ஏற்றத்தாழ்வு நிறைந்திருக்கும் இச்சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து இடஒதுக்கீடு சாதிய அடிப்படையில் வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதை நாங்கள் 1990ம் ஆண்டு முதல் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்.
அதனை பிரதமர் மோடி கொண்டுவந்தபோது நாங்கள் ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். கூட்டணியில் இருப்பதால் அனைத்து கட்சிகளும் அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் தனித்தனி கொள்கைகள், கோட்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
திமுக அதிர்ச்சி
கூட்டணி கட்சியான மா.கம்யூவின் இந்த அறிவிப்பு திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.