மும்பை: பண மோசடி வழக்கில் ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்த சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத், டில்லி சென்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பேன் எனக்கூறியுள்ளார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகிக்கிறார். மும்பை புறநகரான கோரேகான் பகுதியில் குடியிருப்புகளை சீரமைக்கும் பணிக்கான நிதியில் மோசடி செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரித்த அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்டில் சஞ்சய் ராவத்தை கைது செய்தது. இதையடுத்து அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.

பண மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே, சஞ்சய் ராவத்துக்கு ஜாமின் வழங்கி நேற்று(நவ.,09) உத்தரவிட்டார். இதையடுத்து மூன்று மாத சிறைவாசத்துக்குப் பின், அவர் ஜாமினில் வந்தார். அவருக்கு தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் சஞ்சய் ராவத் அளித்த பேட்டி: எனக்கு ஆதரவு அளித்த உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சஞ்சய் ராவத், ஆகியோரை சந்திப்பேன். யார் மீதும் புகார் கூறப்போவதில்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையையும் நாங்கள் பார்க்கவில்லை. எந்த விசாரணை அமைப்பையும் நான் குற்றம்சாட்ட மாட்டேன். மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைந்துள்ளது. அவர்களின் சில நல்ல முடிவை நான் வரவேற்கிறேன்.

துணை முதல்வர் பட்னாவிஸ் பல நல்ல முடிவுகளை எடுக்கிறார். பட்னாவிஸ் தான் மாநிலத்தையும், ஆட்சியையும் வழிநடத்துவதாக நாங்கள் நினைக்கிறோம். இன்று உத்தவ் தாக்கரேயையும், சரத்பவாரையும் சந்திக்க உள்ளேன். இன்னும் 2 அல்லது 4 நாட்களில் பட்னாவிசை சந்தித்து, மக்கள் நலப்பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளேன். டில்லிக்கும் சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பேன். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.