சென்னை--''உலகின் தொன்மையான தமிழ் மொழியில், மருத்துவம், பொறியியல் படிப்புகளை துவங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த, 'இந்தியா சிமென்ட்ஸ்' நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவில், அவர் பேசியதாவது:
ஒரு நிறுவனத்தை 75 ஆண்டுகள் தொடர்ந்து நடத்துவதும், வளர்ச்சி பாதையில் கொண்டுச் செல்வதும் பெரும் சாதனை. இதற்கு காரணமான நிர்வாக இயக்குனர் சீனிவாசனுக்கு வாழ்த்துகள்.
எத்தனை வாய்ப்புகள் உள்ளதோ, அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி, அதை 100 சதவீதம் வெற்றியாக மாற்றும் திறமை படைத்தவர் சீனிவாசன்.
சிமென்ட் உற்பத்தி மட்டுல்லாது, ஏற்றுமதி, கப்பல், சர்க்கரை ஆலைகள், விளையாட்டு என, பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர் சீனிவாசன்.
நான் குஜராத் கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்தபோது, சீனிவாசன், தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தார். அப்போது, எங்கள் இருவருக்கும் நட்பு உருவானது.
பிரதமர் மோடி தலைமையிலான எட்டரை ஆண்டு கால ஆட்சியில் எடுக்கப்பட்ட துணிச்சலான, விரைவான முடிவுகளால், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன், பொருளாதார வளர்ச்சியில், உலக அளவில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
வரும் 2027-ல், இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும் என, உலக பொருளாதார ஆய்வு அமைப்புகள் கணித்து உள்ளன.
பாதுகாப்புத் துறை, நிலக்கரி சுரங்கங்கள், வங்கிகள், 'ட்ரோன்' போன்ற தொழில்நுட்பங்களில் புதிய வர்த்தக வாய்ப்புகளை, மோடி அரசு உருவாக்கியுள்ளது.
மானியம் அதிகரிப்பு
ஆய்வு, வளர்ச்சி, இரண்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கொரோனா பேரிடரை எதிர்கொள்ள, இந்தியாவிலேயே ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், இதற்கு சிறந்த உதாரணம்.
வீடு, கழிப்பறைகள், மின்சாரம், இலவச காஸ் இணைப்பு என, 60 கோடி பேருக்கு, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
அரசியல் வலிமையால், உலகிற்கே எடுத்துக்காட்டாக, ஊழலற்ற, உன்னதமான ஆட்சியை பா.ஜ., நடத்தி வருகிறது. அதனால் தான், வளர்ச்சியும் சாத்தியமாகி வருகிறது.
வரும் 2023ல்-ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி, 6.8 சதவீதமாக இருக்கும் என்றும், இருளுக்கு மத்தியில் ஒளிக் கீற்றாக இந்தியா திகழ்கிறது என்றும், சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்., கணித்துள்ளது.
தமிழகத்தின் மீது பிரதமர் மோடி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களை கூர்ந்து கவனித்து வருகிறார்.
தமிழகத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 91 சதவீதமும், மானியம் 171 சதவீதமும் அதிகரித்துள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க 8,900 கோடி ரூபாய், பாரத்மாலா சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2,800 கி.மீ., சாலைகள் அமைக்க, 91 ஆயிரத்து 570 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.
இது தவிர, தமிழகத்தில் 64 சாலை திட்டங்களை நிறைவேற்ற, 47 ஆயிரத்து 589 கோடி ரூபாய், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை மேம்படுத்த 1,000 கோடி ரூபாய், சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்காக 3,770 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன.
நடவடிக்கை
தமிழ் உலகின் தொன்மையான மொழி; உலகின் மூத்த மொழி. தமிழ் இலக்கியங்கள் மிகப் பழமையானவை. இதனால், தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பெருமை.
இப்போது மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை, தாய்மொழியில் கற்பிக்கும் நடவடிக்கைகளை, பல மாநிலங்கள் துவங்கியுள்ளன.

அதுபோல, தமிழ் மொழியில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாய்மொழியில் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை படிக்கும்போது, மாணவர்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், தாய்மொழியின் வளர்ச்சிக்கும் இது உதவும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
கவர்னர் ரவி, மத்திய தகவல், ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆந்திர நிதி அமைச்சர் புக்கண்ண ராஜேந்திரநாத், இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவர் சீனிவாசன், முழுநேர நிர்வாக இயக்குனர் ரூபா குருநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.