சென்னை: ''தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பா.ஜ., வளர்ந்து வருகிறது; பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை, எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை கொடுத்துள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
பிரதமர் நரேந்திர மோடி, மதுரை மற்றும் திண்டுக்கலுக்கு நேற்று முன்தினம் வந்தார். சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சி அலுவலகமான கமலாலயம் வந்தார்.
இரு தினங்களில் இரு தலைவர்களும் வந்து, பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து பேசி சென்றது, எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை கொடுத்துள்ளது.
![]()
|
மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் கைக் குழந்தைகளுடன் அளித்த வரவேற்பை பார்த்ததும், பிரதமர் மோடி, எங்கும் செய்யாத அளவிற்கு உடனே கார் கதவை திறந்து வெளியே வந்து, வரவேற்பை ஏற்றார்.
பிரதமர் மோடி, திண்டுக்கலில் பேசும்போது, மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள காசி தமிழ் சங்கத்தை பற்றி கூறினார். நாளை முதல் டிச., 16 வரை, காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து 2,400 பேர், 12 ரயில்களில் உ.பி., மாநிலம் வாரணாசி செல்கின்றனர்.
முதல் குழுவை வரவேற்க, 19ம் தேதி வாரணாசியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்கள், பா.ஜ.,வில் சேர வேண்டும் என்பதற்காக தொடர்பு கொள்கின்றனர்; அதற்கான காலம் விரைவில் வரும்.
தமிழக பா.ஜ.,வின் வளர்ச்சி; தமிழக மக்களுக்கு இன்னும் செய்ய வேண்டும்; பிரதமரிடம் என்ன தெரிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக, சென்னையில் அமித்ஷா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடியின் காரில் ஒரு மணி நேரம் பயணித்தேன். 'தமிழக மக்களுக்கு இன்னும் என்ன செய்ய வேண்டும்?' என்று தான் கேட்டார். கூட்டணி பற்றியோ, தேர்தல் பற்றியோ பேசவில்லை.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பா.ஜ., வளர்ந்து வருகிறது. தி.மு.க.,வினர் எங்களை எதிர்க்க ஆரம்பித்து விட்டனர்; அதை எதிர்கொள்ள நாங்களும் தயார்.
மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ், ஐ.டி., அணி தலைவர் நிர்மல்குமார் ஆகியோர், பா.ஜ., நிர்வாகிகள் மீது தி.மு.க., அரசு எப்படி எல்லாம் பொய் வழக்கு போடுகிறது என்ற பட்டியலை, ஆதராங்களுடன் அமித்ஷாவிடம் வழங்கியுள்ளனர். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக, அவர் உறுதி அளித்துள்ளார்.
ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை, காங்கிரஸ் தலைமை வரவேற்ற பின், அக்கட்சியின் தமிழக தலைவர்கள், தி.மு.க., கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் ஏன் பங்கேற்க வேண்டும்?
இட ஒதுக்கீட்டால் பல சமூகங்கள் பயன் பெறும்; அதில் பிராமணர்களும் ஒன்று. ஆனால், தி.மு.க., பிரமாணர்களுக்கு மட்டுமே என்று வெறுப்பை காட்டி வருகிறது.
எத்தனை சமூகத்தினர் பயன் பெறுவர் என்பதை தெரிவிக்க மறுக்கிறது. இடஒதுக்கீட்டை எதிர்க்க கூடிய கட்சி தி.மு.க., மட்டுமே.
கோவை தற்கொலை படை தாக்குதல் விபரங்கள் குறித்து, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் அமித்ஷா கேட்டார்.
அங்கு பதற்றமான சூழல் இருந்தும், தமிழக பா.ஜ., மதச்சாயம் பூசாமல் மக்கள் பிரச்னையாக முன்னெடுத்துள்ளது. அதன் வாயிலாக, தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியது.
'தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை பலப்படுத்தப்பட வேண்டும்; கோவையில் ஒரு என்.ஐ.ஏ., காவல் நிலையம் வேண்டும்.
'என்.ஐ.ஏ., அதிகாரிகளை அதிகளவில் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்; உளவு துறையை பலப்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, அமித்ஷாவிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
மதுரை வந்த பிரதமர் மோடியை சந்திக்க, அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி அனுமதி கேட்டார்; அதன்படி மோடியை பார்த்தார்.
அதேபோல் பன்னீர்செல்வமும், பிரதமரிடம் அனுமதி கேட்டு, பார்த்தார்; இந்த அரசியலுக்குள் பிரதமர் வரவில்லை. இருவருடனும் அன்புடன் பேசிவிட்டு சென்றார்.
பா.ஜ.,வின் நிலைப்பாட்டில் எந்த குழப்பமும் இல்லை. 'கட்சியை பலப்படுத்த வேண்டும்; மக்களின் அன்பை பெற வேண்டும்' என்பது தான் அமித்ஷா சொன்ன அறிவுரை.
இவ்வாறு அவர் கூறினார்.