விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி:
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை குற்றவாளிகள் ஆறு பேரை விடுதலை செய்திருப்பது கண்டனத்திற்குரியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு கவலை அளிக்கிறது. இப்பிரச்னை, மத்திய அரசின் இரட்டை வேடத்தை காண்பிக்கிறது. விடுவிக்கப்பட்ட ஆறு பேரில் மூன்று பேர், இலங்கையைச் சேர்ந்தவர்கள். பயங்கரவாத குற்றத்தால் கைது செய்யப்பட்ட அவர்களை, இந்தியாவிலேயே வைத்து கொள்ள போகின்றனரா அல்லது இலங்கைக்கு திரும்ப அனுப்ப போகின்றனரா?
அவங்களுக்கு நம்ம திராவிட கட்சிகள் விழுந்தடித்து கொண்டு நிவாரண உதவிகளை வாரி வழங்கும், பாருங்க!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை கொல்ல மறைமுக காரணமாக இருந்தது அல்லது கொல்லப் போவது தெரிந்தும் மவுனமாக இருந்தது, தி.மு.க.,வே. அந்த கெட்ட பெயரை சரி செய்ய, இப்போது ராஜிவ் கொலையாளிகள் விடுதலையை, தி.மு.க., ஆதரிக்கிறது. தி.மு.க.,வோடு கூட்டணி வைத்துள்ள காங்கிரசுக்கு வெட்கம் இல்லையா அல்லது காங்கிரசை தன்னோடு வைத்துள்ள தி.மு.க.,வுக்கு அசிங்கம் இல்லையா? அரசியல் என்பது, மானங்கெட்ட பிழைப்பு என, இரு தரப்பினரும் சொல்கின்றனரா?
தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., ஓட்டம் பிடித்தாலும், நீங்க அந்த இடத்துக்கு போகப் போறதில்லை... பின், ஏன் ஆதங்கப்படுறீங்க?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த ஆறு பேரையும் விடுதலை செய்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆறு பேரின் விடுதலைக்கு 2018 செப்டம்பர், 9-ம் தேதி, தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தான் அடிப்படை. அமைச்சரவை தீர்மானத்தை, அப்போதே கவர்னர் ஏற்றுக் கொண்டுஇருந்தால் நான்கு ஆண்டுகள் தாமதம் ஆகியிருக்காது.
சந்தடி சாக்குல, அ.தி.மு.க., அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை பாராட்டியிருக்கிறீர்களே... தி.மு.க., தரப்பு உங்க மேல கோவிச்சுக்காதா?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
வியட்நாமில் உள்ள இலங்கை தமிழ் சொந்தங்கள், தாங்கள் கனடாவுக்கு செல்ல விரும்புவதாகவும், தங்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்றும், ஐ.நா.,விடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆகவே, ஐ.நா., மனித உரிமைகள் அமைப்புகள், உடனே வியட்நாம் அரசுடன் பேசி, அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் முடிவை கைவிட செய்ய வேண்டும்.
இலங்கையில் வாழ்வாதாரம் இல்லாம தானே, அங்க இருந்து வெளியேறி இருக்கின்றனர்... அவங்களை அங்கயே திரும்ப போங்க என்பதில் நியாயமில்லையே!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'செந்தில் பாலாஜி 'டார்கெட்' வைத்து செயல்படக் கூடியவர். குறிக்கோள் வைத்து, ஒரு காரியத்தை செய்வார். அதை எப்படியும் முடித்தே தீருவார். நான் சொன்ன போது ஒரு சிலருக்கு புரியாது இருந்திருக்கும். இப்போது அவர்களுக்கு, புரிந்திருக்கும் என நம்புகிறேன்' என, முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். உண்மை தான். செந்தில் பாலாஜியின் டார்கெட் தி.மு.க., தான். அதை முடித்தே தீருவார். ஆனால், அதற்கு முதல்வரான நீங்கள் ஏன் வாழ்த்து சொல்கிறீர்கள்; பாராட்டு தெரிவிக்கிறீர்கள். இன்னும் உங்களுக்கு புரியவில்லையே.

அடடா... இந்த அளவுக்கு இவர் பேசுவதை பார்த்தால், பா.ஜ.,வால் அனுப்பி வைக்கப்பட்ட, 'ஸ்லீப்பர் செல்'லா செந்தில் பாலாஜி இருப்பாரோ?
மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் ஆர்.தங்கவேலு அறிக்கை:
சிலை கடத்தல் விவகாரத்தில், முன்னாள் ஐ.ஜி.,யான பொன்.மாணிக்கவேல் மீதே சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் பரவியது. அதை மறுத்து விளக்கம் அளித்து உள்ள பொன்.மாணிக்கவேல், பல்வேறு திடுக்கிடும் தகவல்களையும் வெளிப்படுத்தி உள்ளார். சிலை கடத்தல் வழக்குகளில் நிலவும் மர்மங்களை வெளிப்படுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? மேலும், சில வழக்குகளுக்கு இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன் என்றும், உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும், அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது நியாயமான கேள்விகளுக்கு தமிழக அரசு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும்!
விஸ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத இணை செயலர் ஸ்தாணுமலையான் பேட்டி:
தமிழக கவர்னர் ரவி, சனாதன தர்மம் குறித்து பேசுவது அரசியலமைப்புக்கு விரோதமானது அல்ல. சில தினங்களுக்கு முன். தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, கன்னியாகுமரியில் கிறிஸ்துவர்களை புகழ்ந்து பேசி உள்ளார். பல அமைச்சர்கள், 'சிறுபான்மையினர் ஓட்டுகளால் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம்' என்று கூறுகின்றனர். இதெல்லாம் அரசியலமைப்புக்கு முரண் இல்லையா?அவங்களுக்கு வந்தா ரத்தம்; மத்தவங்களுக்கு என்றால் தக்காளி சட்னி என்று தான் நினைக்கிறாங்க!
தலைவர் கனகசபாபதி அறிக்கை:
சனாதன தர்மம் என்பது, அனைத்து உயிர்களையும் ஒன்றாக பாவிக்கும் வாழ்க்கை முறை. அதை பல்லாயிரம் ஆண்டுகளாக பின்பற்றி மதச்சார்பற்ற நாடாக இந்தியா விளங்குகிறது. கவர்னர் கூறியது வரலாற்று பூர்வமான உண்மை. பெரும்பான்மை மக்களின் பண்டிகை களான விநாயகர் சதுர்த்தி, தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத தி.மு.க., தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூச்சமில்லாமல் சொல்லிக் கொண்டு, கவர்னரை கேள்வி கேட்பது நியாயமற்றது.
பெரும்பான்மையினரை புறக்கணிப்பது என்பது தான், தி.மு.க.,வின் மதச்சார்பின்மை கொள்கை!