சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூரில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை துவக்கியது. இந்நிலையில் கடந்த இருதினங்களாக பருவமழை தீவிரமடைந்து வருகின்றன. நேற்று முன்தினம் அதிகப்பட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 44 செ.மீ மழை பொழிந்து, மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. இந்நிலையில் நேற்று(நவ.,12) இரவு காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் 17 செ.மீ மழை கொட்டியது.
கடந்த 24 மணி நேரத்தில் கொட்டி தீர்த்த மழையின் அளவு:
உத்தரமேரூரில் 17 செ.மீ மழையும், திருத்தணியில் 13 செ.மீ மழையும், கொடுமுடியில் 12 செ.மீ மழையும், மதுராந்தகம் மற்றும் திண்டிவனத்தில் 11 செ.மீ மழையும், நாட்றாம்பள்ளியில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.
சின்னாறு அணை, ஊத்துக்கோட்டை, கொடைக்கானல், குன்றத்தூர் செம்பரம்பாக்கம், சின்னக்கல்லாறில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளன.
வல்லம், ஆண்டிபட்டி, சோழவரம், செம்மேடு, திருப்பத்தூர், பூந்தமல்லி, மடத்துக்குளத்தில் தலா 8 செ.மீ மழை பதிவாகின.

மேற்கு தாம்பரம், செஞ்சி, சின்கோனா, வால்பாறை, செங்கல்பட்டு, கேதகண்டபட்டி, தரமணி, பழநியில் தலா 7 செ.மீ மழையும், ஜமுனாமரத்தூர், எழுமலையில் தலா 7 செ.மீ மழையும், சோத்துப்பாறை, கீழப்பென்னாத்தூர், ஓசூரில் தலா 6 செ.மீ மழையும் கொட்டி தீர்த்துள்ளது.
செம்பரம்பாக்கம், பொன்னேரி, வாணியம்பாடி, தாமரைப்பாக்கம், அரண்மனைபுதூர், கடலூரில் தலா 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.
18 மாவட்டகளுக்கு கனமழை எச்சரிக்கை:
மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள - தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேபோல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று(நவ.,13) முதல் ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
( நவ.,13): கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், லட்ச்ததீவு- மாலத்தீவு பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-45 கிலோ மீட்டர் வே கத்தில் வீசக்கூடும்.
நாளை(நவ.,14): லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.