துாத்துக்குடி: துாத்துக்குடியில், சமூகம் சார்ந்த, 'போஸ்டர்' ஒட்டியதில் ஏற்பட்ட தகராறில், வி.சி., நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
துாத்துக்குடி, தென்பாகம் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட, மூன்று சென்ட் பகுதியைச் சேர்ந்தவர் வி.சி., கட்சி பொறுப்பாளர் மாரிமுத்து, 42. அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் முகேஷ், 23. சில நாட்களுக்கு முன் முகேஷ், ஒரு சமூகம் சார்ந்த போஸ்டரை ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரை மாரிமுத்துவின் மகன் ஒன்பதாம் வகுப்பு மாணவரான கருணாகரன், 14, கிழித்துள்ளார். இது குறித்த புகாரின்படி, கருணாகரனை போலீசார் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாரிமுத்து தன் வீடு முன் நின்று, அவ்வழியே வந்த முகேஷை திட்டினார். இதில் ஏற்பட்ட தகராறில், முகேஷ் மற்றும் அவருக்கு ஆதரவான கும்பல், அங்கு நின்ற கருணாகரனை அரிவாளால் வெட்டினர். அதை தடுக்க முயன்ற தந்தை மாரிமுத்துவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், மாரிமுத்து இறந்தார். கருணாகரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்குப் பதிந்த துாத்துக்குடி தென்பாகம் போலீசார், முகேஷை கைது செய்து, முத்துப்பாண்டி உள்ளிட்ட நான்கு பேர் கும்பலைத் தேடுகின்றனர்.
சித்ரவதை செய்து குழந்தை கொலை: கொடூர கட்டட மேஸ்திரி கைது
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த காங்கரனந்தலைச் சேர்ந்தவர் ஜெயசுதா, 27; நர்சிங் படித்துள்ளார். கடந்த, 2017ல் சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த போது, சென்னையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் குணசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கருவுற்ற நிலையில் கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்தனர்.
தாய் வீட்டில் வசித்த ஜெயசுதாவுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. சந்தவாசலைச் சேர்ந்த, மனைவியை பிரிந்து வாழும் உறவினரான கட்டட மேஸ்திரி மாணிக்கம், 31, என்பவருடன் ஜெயசுதாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. எட்டு மாதத்துக்கு முன் ஜெயசுதாவை அவர் திருமணம் செய்து கொண்டார். அவரின், 2 வயது மகன் ஏனோக்ராஜனுடன் சேவூரில் வசித்தார்; ஜெயசுதா கர்ப்பமானார்.
இந்நிலையில், தினமும்குடிபோதையில், மாணிக்கம் குழந்தையை அடித்து உதைத்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்தினார். இதனால் மனமுடைந்த ஜெயசுதா, கர்ப்பத்தை சில நாட்களுக்கு முன் கலைத்ததில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த,23ல் சுடுகஞ்சியை மாணிக்கம் ஊற்றியதில், படுகாயமடைந்த குழந்தை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
கடந்த, 11ல் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை ஆரணி அரசு மருத்துவமனைக்கு ஜெயசுதா அழைத்துச் சென்றபோது, குழந்தை இறந்தது தெரிந்தது. ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, மாணிக்கத்தை கைது செய்தனர்.
தேசிய நிகழ்வுகள்:
மும்பையில் 61 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட, 32 கோடி ரூபாய் மதிப்புள்ள, 61 கிலோ தங்கம் ஒரே நாளில் பிடிபட்டது. இது தொடர்பாக, இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மனைவியை விற்ற கணவர் கைது
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தின் நார்லா என்ற பகுதியைச் சேர்ந்தவர் கிரா பெருக். இவருக்கும், பூர்ணிமா என்ற பெண்ணிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் வேலை தேடி புதுடில்லிக்கு செல்வதாக கூறி, தன்னுடன் மனைவியையும் அழைத்துச் சென்றார்.
புதுடில்லி சென்ற அவர் மனைவியை வேறொரு நபருக்கு பெரும் தொகைக்கு விற்று விட்டு தப்பி ஓடி விட்டார். பாதிக்கப்பட்ட பெண், தன் தந்தைக்கு போன் மூலம் தகவல் தந்துள்ளார். இதைத் தொடர்ந்து பூர்ணிமாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த ஒடிசா போலீசார், கிரா பெருக்கை கைது செய்தனர். அந்த பெண்ணையும், அவரை விலைக்கு வாங்கிய நபரையும் தேடி வருகின்றனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
உலக நிகழ்வுகள்:
துருக்கியில் குண்டுவெடிப்பு- 6 பேர் பலி
இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரின் மிகவும் பரபரப்பான தெரு ஒன்றில் நேற்று மாலை பயங்கர வெடிகுண்டு வெடித்தது. இதில், உடல் சிதறி ஆறு பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். காயம் அடைந்த 53 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
டல்லாஸ் : அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த பழைய போர் விமான சாகச நிகழ்ச்சியின் போது, இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி வெடித்து சிதறின. இதில், ஆறு பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.