உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
எம்.சந்தானம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட நிலையில், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் சாந்தன் என்ற மற்ற ஆறு குற்றவாளிகளை, இப்போது உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ள விவகாரம், நாட்டு மக்கள் மனதில் பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
'பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யலாம்' என, தமிழக அமைச்சரவை ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு பரிந்துரை செய்திருந்தது; கவர்னர் எந்த முடிவும் எடுக்காததால், முதலில் பேரறிவாளனும், அதைத் தொடர்ந்து தற்போது மற்ற ஆறு பேரும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பும் தீர்மானங்கள் மீது, இத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகளில், கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என்று காலக்கெடு எதுவும் கிடையாது. ஆனாலும், நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய தீர்மானங்களுக்கு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க, கவர்னர் காலதாமதம் செய்வதில்லை.
அதேநேரத்தில், ராஜிவ் கொலை குற்றவாளிகளின் விடுதலைக்கு ஒப்புதல் அளிப்பதால், நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ ஏதாவது பலன் உண்டா என்றால், இல்லை என்பதே பதில். அதனால் தான், கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. கவர்னர் முடிவெடுக்க தாமதப்படுத்தியதை காரணமாகக் கூறியும், ராஜிவ் கொலையாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலை நாடுகளில், குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு, அவர்கள் செய்த குற்றத்திற்கேற்ப, 50, 100, 200, 300 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வழக்கம் உள்ளது. அப்படி தண்டனை பெற்றோரை, ஏதாவது அரசியல் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு முன்கூட்டியே விடுதலை செய்து, வெளியே சுதந்திரமாக வழி அனுப்பி வைக்கின்றனரா என்ன? இங்கு இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.
ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, கோவையில், 1998ல் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு, தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு இருப்போரையும் விரைவில் விடுதலை செய்ய, தி.மு.க., அரசும், அமைச்சரவையும் தீர்மானம் நிறைவேற்றினாலும் ஆச்சர்யமில்லை. இப்படிப்பட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுப்பதற்குத் தான், தி.மு.க., கூட்டணி கட்சிகள் சில இருக்கின்றனவே? அதன்பின், கோவையில் சமீபத்தில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான குற்றவாளிகளும் விடுதலை செய்யப்படலாம்.
இதேநிலை நீடித்தால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது போல, தமிழகத்திலும் பயங்கரவாதம் தலைவிரித்தாடும். அப்போது, மக்கள் நித்தம் நித்தம் செத்து பிழைக்க வேண்டிய அவலநிலை உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.