திருச்சூர் : கேரளாவின் திருச்சூரில் உள்ள ஒரு முஸ்லிம் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள், சமஸ்கிருதம், வேதங்கள், மந்திரங்கள், ஸ்லோகங்கள் கற்பது, பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.
ஹிந்தியை திணிப்பதாக, கல்வியை காவிமயமாக்குவதாக அரசியல் போர் தமிழகத்தை போலவே கேரளாவிலும் நடக்கிறது. இந்நிலையில், திருச்சூரில் உள்ள 'அகாடமி ஆப் ஷரியா மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடிஸ்' என்ற முஸ்லிம் கல்வி நிறுவனத்தில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு சமஸ்கிருதம், ஸ்லோகங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
இது குறித்து இந்த கல்வி மையத்தின் முதல்வர் ஓனம்பிலி முகமது பைசி கூறியதாவது: நான் சங்கரர் கோட்பாடுகள் குறித்து படித்துள்ளேன். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு, முஸ்லிம் மதத்தை தவிர மற்ற மதத்தில் உள்ளவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினோம். அதன்படி, 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, அதற்கடுத்த எட்டு ஆண்டுகள், சமஸ்கிருதம், ஹிந்து மந்திரங்கள், ஸ்லோகங்கள் உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகின்றன.
![]()
|
இதற்கான வகுப்புகள் முழுக்க முழுக்க சமஸ்கிருதத்திலேயே நடத்தப்படுகின்றன. முதலில் சிரமப்பட்டாலும், சமஸ்கிருதத்தை கற்பதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். உபநிஷத், புராணங்கள் உள்ளிட்டவற்றுடன், ஹிந்து சமயம் குறித்த அடிப்படை விஷயங்களும் கற்றுத் தரப்படுகின்றன. இதற்கு மாணவர்கள், பெற்றோர், சமூகத்தினர் என எந்த தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உண்மையில், இந்த முயற்சியை பல்வேறு தரப்பினரும் பாராட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
சமஸ்கிருதம் கற்றுத் தரும் பேராசிரியர்கள் கூறியதாவது: நெற்றியில் விபூதி, சந்தனத்துடன் நாங்கள் இந்த கல்வி மையத்துக்குள் நுழைந்தபோது, பலரும் இங்கு என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டனர். முஸ்லிம் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்றுத் தருவதாக கூறியபோது, அவர்கள் ஆச்சரியப்பட்டதுடன், இந்த முயற்சிக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்த மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்றுத்தர வேண்டும் என்று பள்ளி முதல்வர் கேட்டபோது, 'மொழிக்கு மதபேதம் கிடையாது; நிச்சயம் கற்றுத் தருகிறோம்' என்று கூறினோம். முதலில் சற்று கடினமாக உணர்ந்தாலும், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சமஸ்கிருதம் கற்பது பாராட்டக் கூடியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.