சென்னை; அரசின் விருப்ப ஒதுக்கீட்டின் கீழ், போலீஸ் அதிகாரியின் மனைவி மற்றும் முன்னாள் அதிகாரி மகனுக்கு, வீட்டுமனை ஒதுக்கீடு செய்த விவகாரத்தில், அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சமூக ஆர்வலர் என்ற போர்வையில், உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி, சென்னை திருவான்மியூரில், ஐ.பி.எஸ்., அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வின், முன்னாள் முதல்வரின் செயலராக இருந்த ராஜமாணிக்கத்தின் மகன் துர்காசங்கருக்கு, 2008ல் வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன.
அரசின் விருப்ப ஒதுக்கீட்டின் கீழ், இந்த வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன.
இவ்வாறு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளை, 'லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக் ஷன்' என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்து பலன் அடைந்ததாக, பர்வின் மற்றும் துர்கா சங்கருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
![]()
|
உடந்தையாக இருந்ததாக, அப்போது வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த பெரியசாமி, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்த ராஜமாணிக்கம், ஐ.பி.எஸ்., அதிகாரி ஜாபர்சேட் ஆகியோருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசின் ஒப்புதலை பெறாததால், அதிகாரி ஜாபர்சேட்டுக்கு எதிரான வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அமைச்சர் பெரியசாமி, பர்வின், துர்காசங்கர், ராஜமாணிக்கம் ஆகியோருக்கு எதிராக, சென்னையில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, ராஜமாணிக்கம், துர்காசங்கர் தாக்கல் செய்த மனுக்களை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி, அமைச்சர் பெரியசாமியும், பர்வினும், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சியங்கள், ஆவணங்களை பரிசீலிக்கும் போது, ராஜமாணிக்கம் மற்றும் துர்காசங்கருக்கு எதிராக வழக்கு தொடர போதிய முகாந்திரங்கள் உள்ளன.
பெரியசாமிக்கும், பர்வினுக்கும் எதிராகவும் ஆவணங்கள் உள்ளன. அதனால், வழக்கு ரத்து என்ற கேள்வி எழாது.
எனவே, வழக்கில் இருந்து, ராஜமாணிக்கம், துர்காசங்கரை விடுவிக்க முடியாது. சிறப்பு நீதிமன்ற உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை. அந்த உத்தரவு, உறுதி செய்யப்படுகிறது.
இருவரது மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அதேநேரத்தில், பெரியசாமி மற்றும் பர்வினுக்கு எதிரான வழக்கையும் ரத்து செய்ய விரும்பவில்லை. அந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.