தேனி,- -கொலை வழக்கில் சம்பந்தம் இல்லாதவரின் பெயரை சேர்த்த சிவகங்கை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனால், 29 நாட்கள் சிறையில் இருந்த ராஜேஷ்குமாருக்கு இன்ஸ்பெக்டர் சம்பளத்தில் இருந்து இழப்பீடு வழங்கவும், அவர் மூன்றாண்டுகளுக்கு விசாரணை அதிகாரியாக பணியாற்றக்கூடாது எனவும் தேனி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தமபாளையம் காளியம்மன் கோயில் தெரு பிரித்விராஜ் 42. இவர் மனைவியை விட்டு பிரிந்ததற்கு மைத்துனர் லாரன்ஸ்தான் காரணம் என நினைத்து 2017 நவ., 22ல் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். காயமடைந்த லாரன்ஸ் சிகிச்சைக்கு பின் டிச.,1ல் இறந்தார்.
உத்தமபாளையம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராமகிருஷ்ணன், இவ்வழக்கில் பிரித்விராஜ், அவரது நண்பர் ராஜேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தார்.
வழக்கில் நவ., 8 ல் தேனி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சஞ்சய்பாபா பிறப்பித்த உத்தரவு: குற்றவாளி பிரித்விராஜூக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. ராஜேஷ்குமார் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்தும் விடுவிக்கப்படுகிறார். அவர் சட்ட விரோதமாக 29 நாட்கள் சிறையில் இருந்ததற்கு சட்டப்படி இழப்பீடு பெற தகுதி உடையவர். விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம் உரிய இழப்பீடு பெற, ராஜேஷ்குமார் நீதிமன்றத்தை நாடலாம். இழப்பீட்டுத்தொகை இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் பிடித்தம் செய்து வழங்க வேண்டும். அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த வழக்கிலும் விசாரணை அதிகாரியாக அவர் நியமிக்கக்கூடாது. விசாரணை அதிகாரியாக உள்ள வழக்குகளில் வேறு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததால் டி.ஜி.பி., ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வழக்கில் தொடர்பு இல்லாத ஒருவரை கொலை குற்றச்சாட்டு சுமத்தி பதிவு செய்துள்ளார். அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.