புதுடில்லி-'கட்டாய மத மாற்றம் மிகத் தீவிரமான பிரச்னை; நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
![]()
|
பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் கட்டாய மத மாற்றத்தை தடுப்பது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதில் கூறப்பட்டு உள்ளதாவது:
நாட்டின் பல பகுதிகளிலும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. துாண்டுதல், ஏமாற்றுதல், அச்சுறுத்துதல் ஆகியவற்றின் வாயிலாக மத மாற்றங்கள் நடக்கின்றன.
மேலும், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்தும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது; இது, தேசிய அளவிலான பிரச்னையாக உள்ளது.
மோசமான விளைவுகள்
கட்டாய மத மாற்றம் இல்லாத ஒரு மாவட்டம் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பில்லி, சூனியம், மூட நம்பிக்கை ஆகியவற்றின் வாயிலாகவும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது; இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
கட்டாய மத மாற்றம் மிகவும் தீவிரமான பிரச்னை. இதை தடுக்க மத்திய அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.
மத சுதந்திரம் இருக்கலாம்; ஆனால், கட்டாய மத மாற்றம் என்பது சுதந்திரம் இல்லை; இது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.
இது, மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான மத சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இதை தடுக்க மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது; என்ன நடவடிக்கை உள்ளது என்பதை சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குற்றம்
இது குறித்து, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:
கட்டாய மத மாற்றம் தொடர்பாக பல மாநில சட்டசபைகளில் விவாதம் நடந்துள்ளது. பணம் கொடுத்து மதம் மாற்றுதல், ஏமாற்றி, அச்சுறுத்தி, மோசடி செய்து மதம் மாற்றுதல் போன்றவற்றைத் தடுக்க, ஒடிசா மற்றும் மத்திய பிரதேச மாநில சட்டசபைகளில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் தான் மத மாற்றம் அதிகம் நடக்கிறது. பெரும்பாலான சம்பவங்களில் மத மாற்றத்துக்கு ஆளானோருக்கு, இது குற்றம் என்பது கூட தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, 'கட்டாய மத மாற்றத்தை தடுப்பது குறித்து, வரும் 22ம் தேதிக்குள் மத்திய அரசு தன் பதிலை தெரிவிக்க வேண்டும்' எனக் கூறி, விசாரணையை 22ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
எந்தெந்த மாநிலங்களில்?
கட்டாய மத மாற்றத்தை தடுக்க பல்வேறு மாநிலங்களிலும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஒடிசாவில், 1968ல் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு, கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இதற்கான சட்டம் இயற்றப்பட்டுஉள்ளது.
கர்நாடகாவில், 'கட்டாய மத மாற்றம் செய்வது குற்றம்' என அறிவிக்கப்பட்டு கடந்தாண்டு சட்டம் இயற்றப்பட்டது.
இதன்படி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோரை மத மாற்றம் செய்வோருக்கு, 3 - 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதிகபட்சமாக, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
![]()
|
தாங்களாகவே மதம் மாற விரும்புவோர், 30 நாட்களுக்கு முன், அதற்கான காரணத்தை விளக்கி, மாநில அரசிடம் உறுதி ஆவணம் அளிக்க வேண்டும்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள டாமோ மாவட்டத்தில், கிறிஸ்துவ அமைப்பு சார்பில் குழந்தைகள் காப்பகம் நடத்தப்பட்டு வந்தது. இங்கு தங்கியிருந்த குழந்தைகளுக்கு கிறிஸ்துவ மத போதனைகள் கற்றுத் தரப்படுவதாகவும், அவர்களை மதம் மாற்றுவதாகவும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் ம.பி., போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து, அந்த குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வந்த 10 பேர் மீது, ம.பி., மத சுதந்திர சட்டம் மற்றும் சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.