உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:...
இல.ஆதிபகவன், சென்னையிலிருந்து எழுதுகிறார்:
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் உள்பட, 16 பேரை படுகொலை செய்த குற்றவாளிகள் ஆறு பேரை, அவர்கள் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததை காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அப்படி விடுதலையானவர்களை தியாகிகளாக்க முற்படுகிறது ஒரு கூட்டம்; பேட்டிக்கும் ஏற்பாடு செய்து, 'டிவி'யில் ஒளிபரப்புகிறது. ஒரு வேளை பாராட்டு விழாவும் நடத்துவரோ என்னவோ...!
![]()
|
விடுதலையானவர்களில், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இந்தியர்கள் அல்ல; இலங்கை நாட்டவர். ராஜிவை கொல்ல கள்ளத் தோணியில் வந்து இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள். ராஜிவ் கொலை வழக்கில் துாக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும், இவர்களின் இலங்கை குடியுரிமையை, அந்நாட்டு அரசு பறித்து விட்டது; அதனால், இவர்களை வெளியில் நடமாட விடாமல், சிறப்பு முகாமில் தங்க வைக்க வேண்டும்.
இந்த நால்வரும், 1990ல், இந்தியாவுக்குள் நுழைந்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது; அப்போது, மாநிலத்தில் இருந்தது தி.மு.க., ஆட்சி என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த, ௧௯௬௯ முதல் ௧௯௭௬ வரை, கருணாநிதி தலைமையிலான தி.மு.க., ஆட்சியில் இருந்தது. அதன்பின், 1௩ ஆண்டு வனவாசத்துக்குப் பின், அதுவும் எம்.ஜி.ஆர்., மறைந்த பின், 1989ல் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதற்கு காரணமான புண்ணியவான், ஆர்.எம்.வீரப்பன்.
எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு, வீட்டில் முடங்கி கிடந்த அவரது மனைவி ஜானகியை உசுப்பேற்றி முதல்வராக்கினார். அ.தி.மு.க., உடைந்து, 'ஜா., அணி - ஜெ., அணி' என பிரிந்தது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டு, அ.தி.மு.க., தலைமை அலுவலகமும் பூட்டப்பட்டது. இதன் பலனாகவே, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.
'இனி நாம் ஆட்சிக்கே வரவே வாய்ப்பில்லை' என்ற விரக்தியில் இருந்த தி.மு.க.,வினர், எதிர்பாராது அடித்த யோகத்தில், அன்று போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதற்கு ஈடாக, அரசுத் துறை அதிகாரிகளும், தங்களின் விருப்பம் போல, 'வேட்டையாடி' கொழுத்தனர்.
அந்த தருணத்தில் தான், இலங்கையில் இருந்து விடுதலை புலிகள் தமிழகத்துக்கு வருவதும், போவதுமாக இருந்தனர். ஏதோ, எழும்பூருக்கும், பாண்டி பஜாருக்கும் போய் வருவது போல, இரு நாடுகளுக்கும் இடையே பயணித்தனர். இதற்கு முக்கிய காரணகர்த்தா, அப்போதைய உள்துறை செயலர் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
![]()
|
அதனாலேயே, 'மாநில அரசின் முக்கிய தகவல்கள் விடுதலை புலிகளுக்கு கசிகிறது' என்று மத்திய உளவுத் துறை எச்சரித்தும், அப்போதைய தி.மு.க., அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது. விளைவு, தி.மு.க., ஆட்சி கலைக்கப்பட்டது. இதற்கு காரணமாக இருந்தவர், அப்போதைய மத்திய சட்ட அமைச்சர், சுப்ரமணியசாமி.
அன்று, கள்ளத் தோணியில் தமிழகம் வந்த குரூப் தான் இந்த நால்வரும். இப்போது, மீண்டும் இவர்களால் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படப் போகிறது. அதற்கு முன் இவர்களை, மத்திய அரசின் வெளியுறவுத் துறை உதவியுடன் இலங்கைக்கே நாடு கடத்த வேண்டும். அதுவரை, வெளியில் சுதந்திரமாக நடமாட விடாமல் சிறப்பு முகாமில் தங்க வைக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் விழிப்புடன் செயல்பட்டு நடவடிக்கை எடுப்பது ஆட்சிக்கு நல்லது!