வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: குஜராத் தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மை பெற்றால் பூபேந்திர படேல் முதல்வராக இருப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் டிச.,5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக, 89 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கவுள்ளது.
பதிவான ஓட்டுகள், டிச., 8ல் எண்ணப்படுகின்றன. இதற்காக பா.ஜ., காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. ஆம்ஆத்மி கட்சியை பொறுத்தவரையில் முதன்முறையாக குஜராத் தேர்தலில் போட்டியிடுகின்றன. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக தேசிய இணைப் பொதுச்செயலாளர் இசுதன் காத்வி அறிவிக்கப்பட்டார்.

ஆனால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., சார்பில் இதுவரை முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ., முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛குஜராத்தில் பா.ஜ., பெரும்பான்மை பெற்றால் பூபேந்திர படேல் முதல்வராக இருப்பார். அவர் முதன்முறையாக எம்எல்ஏ ஆன கட்லோடியா தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவார்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் பா.ஜ., வெற்றிப்பெறும் பட்சத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக குஜராத்தில் ஆட்சியமைக்கும். கடந்த செப்டம்பர் 2021ல் விஜய் ரூபானிக்கு பதிலாக, பூபேந்திர படேல் குஜராத் முதல்வராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.