ஈரோடு: தமிழகத்தில் வெளியாகவுள்ள அனைத்து படங்களையும் ஓடி ஓடி வாங்குகிறார்கள். விளம்பர முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின் கட்டணம், பால் உள்ளிட்ட பொருட்கள் உயர்ந்து வருகின்றன. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அத்தியூரில் தமிழக அரசை கண்டித்து பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் கலந்து கொண்டு பேசியவதாவது: விலை உயர்வு...விலை உயர்வு இதுதான் திமுக அரசின் தாரக மந்திரம். தமிழகத்தில் வெளியாகவுள்ள அனைத்து படங்களையும் ஓடி ஓடி வாங்குகிறார்கள்.
விளம்பர முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார். சென்னை மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் முதல்வர் குடும்பத்துடன் 'லவ் டுடே' படத்தை பார்க்கிறார்.
எங்கே பார்த்தாலும் ஊழலின் இலக்கணமாக அமைச்சர்கள் உள்ளனர். இது போன்ற மோசமான ஆட்சியை இதுவரை பார்த்தது இல்லை. 2024 தேர்தல்-தமிழகம் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளோம். ஒவ்வொருவரும் பிரதமர் மோடியாக தன்னை உணர்ந்து,பணியாற்றினால் நிச்சயம் வெற்றி நம் பக்கம்.நேரம் வந்துவிட்டது,தமிழகத்தில் மாற்றம் வரப்போகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தினம்தோறும் ஒவ்வொரு பொருளாக விலையை உயர்த்தி உள்ளார்கள். வீட்டு வரி வீட்டை விற்றால் கூட கட்டமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மண் திருட்டு, கனிம வளங்கள் திருட்டு அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை மத்திய அரசு குறைத்தும் மாநில அரசு விலையை குறைக்கவில்லை.
அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82% விவசாயிகளை சென்றடைகிறது. ஆனால் ஆவின் நிறுவனம் இப்படி செய்யவில்லை அதனால் ஆவின் நட்டத்தில் செல்கிறது. பால் உற்பத்தியில் வரும் லாபம் விவசாயிகளை சென்றடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.