வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'ஆன்லைன்' முறையில், ஆற்று மணல் பெறுவதற்கான முன்பதிவுக்கு, திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால், கட்டுமானத் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், அரசு மணல் குவாரிகளில் முறைகேடுகளைத் தடுக்க, ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் திட்டத்தை, நீர்வளத்துறை அறிவித்தது. இதன்படி, எந்தெந்த இடங்களில் குவாரிகள் செயல்படுகிறதோ; அதன் அருகில் மணல் விற்பனை கிடங்கு ஏற்படுத்தப் பட்டது.
இந்தக் கிடங்குகளில் இருந்து மணல் பெற, பொது மக்கள், லாரி உரிமையாளர்கள், ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். வரிசை எண் அடிப்படையில், உரிய நபர்கள் மணல் பெறலாம்.
தற்போது, வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், ஆற்று படுகைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பெரும்பாலான குவாரிகள், செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
![]()
|
இதைக் கருத்தில் வைத்து, ஆன்லைன் முறையில் மணல் வாங்க விரும்புவோர், வெள்ளிக்கிழமை மாலை, 4:00 மணிக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். மணல் இருப்பு அடிப்படையில், அடுத்த ஒரு வாரத்துக்கு தான், மணல் பெற பதிவு செய்ய முடியும் என, நீர் வளத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கட்டுமானத் துறையினர் கூறியதாவது: பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில், குவாரிகளில் மணல் எடுத்து வர முடியாது என்பதால், தட்டுப்பாடு ஏற்படும். தற்போது, வெள்ளிக்கிழமை அன்று பதிவு என்ற புதிய நடைமுறையால், மணல் தட்டுப்பாடு மேலும் அதகரிக்கும்.
கட்டுமான பணிகளை மேற்கொள்வோர், கடுமையாக பாதிக்கப்படுவர். இதுபோன்ற சூழலில், இறக்குமதி மணல் விற்பனையை அதிகரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.