அந்தியூர் : ''எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது வயல்வெளியில் கான்கிரீட் சாலை அமைத்து பார்வையிட்ட ஸ்டாலின், தற்போது வயல்வெளியில் சிவப்பு கம்பளம் விரித்து மழை சேதத்தை பார்வையிடுகிறார்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து, பா.ஜ., சார்பில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. கட்டுமான பொருளில் தொடங்கி சொத்து வரி, குடிநீர், மின் கட்டணம், ஆவின் பொருட்கள் விலை என எல்லா கட்டணமும் உயர்ந்து விட்டது.
![]()
|
கடந்த, 16 மாத தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வு மட்டுமே சாதனையாக உள்ளது.
சென்னை மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், தன் மகன் வெளியிட்டுள்ள படத்தை வீட்டில் பார்த்துக் கொண்டிருந்தார், முதல்வர்.
எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது வயல் வெளியில் கான்கிரீட் சாலை அமைத்து பார்வையிட்ட ஸ்டாலின், தற்போது வயல்வெளியில் சிவப்பு கம்பளம் விரித்து மழை சேதத்தை பார்வையிடுகிறார்.
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு, 3 ரூபாய் உயர்த்தி விட்டு, விற்பனை விலையை, 12 ரூபாய் உயர்த்துவது தான் திராவிட மாடல்.
குஜராத்தின் 'அமுல்' கூட்டுறவு நிறுவனம், தன் வருவாயில், 82 சதவீதத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறது. ஆனால், ஆவின் நிறுவனம் ஊழல் காரணமாக நஷ்டத்தில் இயங்குகிறது.
கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு, 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த ஆவின் தற்போது, 32 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது.
ஆனால் அமைச்சர் நாசர், நாளொன்றுக்கு, 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாக பொய் சொல்கிறார்.
'டிலைட்' வகை பாலுக்கு மட்டும், 5 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது. ஆறு வண்ணங்களில் விற்பனையாகும் பாலுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது.
கர்நாடகாவில் ஆரஞ்ச் கலர் பால் லிட்டர், 46 ரூபாய்-க்கு விற்கும்போது, ஆவின் அதே வகை பாலை, 60 ரூபாய்-க்கு விற்கிறது.
பால் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளது என்றதும், 'அதை காய்ச்சி உருக்கி விடுங்கள். பொங்கலுக்கு நெய்யாக விற்று விடலாம்' என, அமைச்சர் சொல்கிறார். இதுபோன்ற கோமாளித்தனமான அரசை பார்த்ததில்லை.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
கண்டனம்
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:
அறுவை சிகிச்சையின்போது அரசு டாக்டர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால், கல்லுாரி மாணவி, கால்பந்து வீராங்கனை பிரியா, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பிரியா குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
திறனற்ற தி.மு.க., ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து வருகிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. தவறான சிகிச்சை வழங்கிய அரசு டாக்டர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
பிரியா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்டஈடாக 2 கோடி ரூபாய், அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.