கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில், சமீபத்தில் கார் குண்டு வெடித்தது. பலரை கொல்லும் திட்டத்துடன் ஜமேஷா முபின் என்பவர் காரில் சென்றபோது, குண்டு வெடித்து இறந்தார். பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டு விட்டாலும், இதன் பின்னணியில் பயங்கரவாத செயல்பாடு உள்ளது என்பதால், இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஏ.டி.எஸ்., எனப்படும் பயங்கரவாத தடுப்பு படையை உருவாக்க வேண்டும் என, மாநில அரசால் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளில், போலீஸ் தலைமையகம் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் பணியாற்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் பயங்கராவதிகள் செயல்பாடு மற்றும் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்த, போலீஸ் துறையில் உளவுப் பிரிவு உள்ளது. அதன் உட்பிரிவாக, உள்நாட்டு பாதுகாப்பு இயங்கி வருகிறது. உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், அதன் தலைமை பொறுப்பில் இருக்கிறார்.
உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் கீழ், கியூ பிரிவு, சிறப்பு பிரிவு என இரண்டு பிரிவுகள், பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணித்து, உளவு தகவல்களை திரட்டி வருகின்றன. பயங்கரவாத சித்தாந்தம் அடிப்படையில் இயங்கும் பல்வேறு குழுக்களின் செயல்பாடுகளை கண்காணித்து, கட்டுப்படுத்தும் பணியை, கியூ பிரிவு செய்து வருகிறது.
மத அடிப்படைவாத அமைப்புகள், அடிப்படைவாதிகளின் செயல்பாடுகளை கண்காணித்து, மத பயங்கரவாதத்தை தடுக்கும் வேலையை சிறப்பு பிரிவு செய்து வருகிறது. இந்த இரண்டு பிரிவுகளும் பயங்கரவாத செயல்பாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து, தலைமைக்கு தெரிவிக்கும். அந்த தகவல், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள போலீசாருக்கு அனுப்பப்படும். அப்பகுதி சட்டம் ஒழுங்கு போலீசார் நடவடிக்கை எடுப்பர்.
இது தான் நடைமுறை. சட்டப்பூர்வமாக வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது, உள்ளூர் போலீசாரின் பணி. ஆனால், உளவுப்பிரிவு மேலிடம் கொடுக்கும் தகவல் குறித்து, உள்ளூர் போலீசார் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதில்லை.
சொல்லப் போனால், அவர்களுக்கு இருக்கும் ஏராளமான பணிகளுக்கு இடையே, உளவுப்பிரிவு மேலிடம் கொடுக்கும் தகவல் மீது, நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.

கோவை கார் குண்டு வெடிப்புக்கு முன்பே, தமிழகம் முழுக்க இருக்கும் பயங்கரவாதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்கள் என்னென்ன செய்யக் கூடும் என்பது வரை, உள்ளூர் போலீசாருக்கு அனுப்பப்பட்டது. அதில் ஒன்று தான் கோவை கார் குண்டு வெடிப்பில் ஈடுபட்டோர் குறித்த தகவல்.
வழக்கம் போல, பல்வேறு பணிகளுக்கு இடையே, கோவை மாநகர போலீசார், அதில் தீவிர கவனம் செலுத்த முடியாமல் போனது. கார் குண்டு வெடிப்பு சம்பவமும் நடந்து விட்டது.
இந்த நிகழ்வுக்கு பின், என்ன தான் உளவுப்பிரிவு போலீசார் முன்கூட்டியே தகவலை சேகரித்து கொடுத்தாலும், உள்ளூர் போலீசார் தீவிரமாக செயல்படாத வரை, குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும் என்பதை, காவல் துறை புரிந்து கொண்டது.
இதையடுத்தே, உ.பி., மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீஹார், டில்லி, கர்நாடகா, கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், போலீஸ் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏ.டி.எஸ்., பிரிவை, தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும் என, தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
உளவுப் பிரிவுக்குள் இயங்கி வரும் கியூ பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் சேகரிக்கும் அனைத்து தகவல்களும், இனி ஏ.டி.எஸ்., பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த தகவல்களை, அவர்கள் தீவிரமாக விசாரிப்பர். தகவல்களில் உண்மை இருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பர்.
இதற்கு மத்தியில், ஏ.டி.எஸ்., பிரிவினரும் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து தகவல் சேகரித்து, நேரடியாகவே நடவடிக்கை எடுப்பர். உள்ளூர் போலீசார், சாதாரண வழக்கில் ஒருவரை கைது செய்து விசாரணைக்கு பின், பயங்கரவாத செயல்பாடு இருந்தால், அந்த வழக்கை ஏ.டி.எஸ்., பிரிவுக்கு மாற்றி விடுவர்.
தமிழகத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் போல ஏ.டி.எஸ்., ஒரு தனி பிரிவாக இயங்கும். சென்னையில் அதன் தலைமையகம் இருக்கும். அதற்கு என தனி போலீஸ் படை இருக்கும். அதன் தலைவராக, ஏ.டி.ஜி.பி., அல்லது ஐ.ஜி., அந்தஸ்தில் இருப்பவர் நியமிக்கப்படுவார்.
கியூ பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாவட்டங்களில் டி.எஸ்.பி., அந்தஸ்தில் அதிகாரிகளும், அவருக்கு கீழே போலீசாரும் இயங்குவது போல, ஏ.டி.எஸ்., பிரிவுக்கு என சிறப்பு போலீசாரும், அதிகாரிகளும் எல்லா மாவட்டங்களிலும் நியமிக்கப்படுவர்.
பெரிய வழக்குகளை சென்னையில் உள்ள அதிகாரிகள் மேற்பார்வையிட்டு நடத்துவர். மற்ற வழக்குகளை, மாவட்டங்களில் இந்த பிரிவு போலீசார் நடத்துவர். என்.ஐ.ஏ.,க்கு என உள்ள சிறப்பு சட்டங்களின் கீழ், ஏ.டி.எஸ்., போலீசார் வழக்கு பதிவு செய்வர்; அது என்.ஐ.ஏ., விசாரிக்கப்பட வேண்டியதாக இருந்தால், அந்த வழக்கையும் என்.ஐ.ஏ., தானாகவே விசாரணைக்கு எடுத்து கொள்ளும்.
மற்ற மாநிலங்களில் உள்ள ஏ.டி.எஸ்., போலீசாருக்கு, இதுநாள் வரை தமிழகத்தில் யாருடன் தொடர்பில் இருப்பது என்ற குழப்பம் இருந்தது. இனிமேல், தமிழக ஏ.டி.எஸ்., போலீசாருடன், அவர்கள் உளவு தகவல்களை பரிமாற்றம் செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.