சென்னை: அனைத்து பயணியர் ரயில்களையும், ஏற்கனவே இருந்த சாதாரண கட்டணத்தில், மீண்டும் இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு குறைந்த பின், நாடு முழுதும் விரைவு மற்றும் மின்சார ரயில்கள் வழக்கம் போல், மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த ரயில்கள் தற்போது, விரைவு அல்லது சிறப்பு ரயில்களின் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து, தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க செயலர் ஏ.கிரி கூறியதாவது: கொரோனா பாதிப்பு குறைந்து, பெரும்பாலான ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால், ஏற்கனவே இயக்கப்பட்ட பயணியர் ரயில்கள், தற்போது விரைவு அல்லது சிறப்பு ரயில் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன.

அதே வழித்தடம், அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்கின்றன. விரைவு அல்லது சிறப்பு ரயில் கட்டணம் என்பதால், குறைந்த கட்டணமே, 30 ரூபாயாக உள்ளது; ஏற்கனவே, 10 ரூபாய் தான் இருந்தது.
எனவே, பயணியர் ரயில்களில், ஏற்கனவே இருந்த சாதாரண கட்டண முறையை, ரயில்வே மீண்டும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.